ரெய்கி கலைக்கு அறிமுகம்

வணக்கம்,
ரெய்கி எனும் அற்புத கலையை அறிந்துக் கொள்ள ஆர்வம் கொண்ட அனைவருக்கும் இந்த புத்தகம் பயனுள்ளதாக அமையும். இந்த புத்தகத்தை பயன்படுத்தி முழுமையாகவும் ஆழமாகவும் ரெய்கியை புரிந்துக் கொள்ளலாம். இந்த புத்தகத்தை ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், ஆரோக்கியம் குறைவாக உள்ளவர்களுக்கு மீண்டும் ஆரோக்கியம் திரும்பவும், மன நிம்மதியை பாதுகாக்கவும், ஆராவிலும் (Aura), உடலின் சக்ராக்களிலும் (Chakra) படிந்திருக்கும் கெட்ட சக்திகளை தூய்மைபடுத்தவும் அவற்றுக்கு சக்தியளிக்கவும் உதவும். குடும்ப உறவுகள், சமுதாயம் மற்றும் பொருளாதார நிலைகளை, மேம்படுத்தவும் உறுதுணையாக இருக்கும்.

இந்த புத்தகத்தை மீண்டும் மீண்டும் வாசித்து இதிலுள்ள கருத்துக்களை புரிந்துக் கொள்ளுங்கள். ரெய்கி தொடர்பான இணைய தளங்களிலும் மற்ற புத்தகங்களிலும் கிடைக்கும் அறிவுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த நூலில் வழங்கப்பட்டிருக்கும் பயிற்சிகளை தொடர்ந்து செய்து வாருங்கள். உடலிலும், மனதிலும், வாழ்க்கையிலும் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வாருங்கள். இந்த கவனிப்பும், மன ஓர்மையும், உங்கள் வாழ்க்கையை மேலும் மேன்மையடையச் செய்யும்.

முன்னுரை
அண்ட சராசரங்களையும், அகில உலகங்களையும், அதன் படைப்புகளையும் படைத்த எல்லாம் வல்ல பரம்பொருளின் அனுமதியுடனும், உதவியுடனும் இந்த நூலை தொடங்குகிறேன். இந்த நூலை எழுத மற்றும் வெளியிட எனக்கு வழிகாட்டியாக இருந்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கே புகழ்கள் அனைத்தும். ரெய்கி எனும் அற்புத கலையை கற்றுக்கொள்ள ஆர்வம் கொண்டு இந்த
நூலை வாசிக்கத் தொடங்கிய உங்களுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்.

பத்து ஆண்டுகளுக்கு மேலாக நான் ரெய்கியை பயிற்சி செய்து வருகிறேன். ரெய்கி என்றால் என்ன? அது எவ்வாறு செயல்புரிகிறது? அதன் தன்மைகள் என்ன? அதன் நன்மைகள் என்ன? அதை எவ்வாறு பயன்படுத்துவது? என்பன போன்ற பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வந்தேன். அவற்றில் கிடைத்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். ரெய்கியை முழுமையாக அறிந்து உணர்ந்து முறையாக பயிற்சிகள் செய்யும் போது உங்களுக்குள் பல மாறுதல்களை நீங்கள் உணரலாம். உங்களை சுற்றி வாழும் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் பல உதவிகளை புரியலாம்.

இந்த நூலின் வாயிலாக நாம் அறிந்துக் கொள்ள போவது ஏதோ ஒரு அதிசயமான சக்தியை பற்றியோ, ஆச்சரியமான சக்தியை பற்றியோ, நமக்கு தொடர்பில்லாத ஒரு ஆற்றலை பற்றியோ அல்ல. இந்த நூலின் மூலமாக நம்மைப் பற்றியும், நம் சுயத்தை பற்றியும் தான் அறிந்துக் கொள்ள போகிறோம்.

பிரபஞ்ச ஆற்றலானது தான் இயங்கும் இடத்துக்கும் தன்மைக்கும் ஏற்ப உருவமும், செயலும், சக்தியும், அமையப்பெறுகிறது. நீங்களும், நானும், மற்ற உயிர்களும், மேலும் நம் கண்களால் காணும் அனைத்து விசயங்களும், பிரபஞ்ச ஆற்றலில் இருந்து உருவானவைதான். இயற்கையில் அனைத்து படைப்புகளும், உயிரினங்களும், பிரபஞ்ச ஆற்றலின் பரிமாணமாகவும் வடிவமாகவும் இருக்கின்றன.

இந்தக் புத்தகத்தை எழுதும் நானும், இதை வாசிக்கும் நீங்களும், வாசிக்க நீங்கள் பயன்படுத்தும் கையடக்க தொலைபேசியும், கணினியும், பிரபஞ்ச ஆற்றலின் வடிவங்கள்தான். எளிமையாக சொல்வதானால் கண்களால் காணமுடியாத ஆற்றலானது கண்களால் காணக்கூடிய மனிதனாகவும், விலங்குகளாகவும், தாவரங்களாகவும், கருவிகளாகவும் பரிமாணம் அடைந்திருக்கிறது அவற்றை தான் நாம் நம் கண்களால் காண்கின்றோம்.

பரஞ்சோதி மகான் அழகான ஒரு தத்துவத்தை குறிப்பிடுவார். “இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பாக இறைவனையன்றி எதுவுமே இல்லாததால், ஏதோ ஒன்றை எடுத்து இறைவன் அனைத்தையும் படைத்திருக்கிறான் என்பதில்லை. இறைவன் தன் சுயத்திலிருந்து அனைத்தையும் படைத்ததினால் நாம் காணும் அனைத்துமே இறைவனின் மறு உருவமாகவே இருக்கின்றன” என்பார்.

அதைப்போலவே இந்த பூமியில் எந்த படைப்பு உருவானாலும் அதன் அடிப்படை மூலப்பொருள் பிரபஞ்ச ஆற்றலாக இருப்பதினால், நாம் காணும் அனைத்தும் பிரபஞ்ச ஆற்றலின் மறு உருவமாகவே இருக்கின்றன. பல கோடி நுண்ணிய செல்களின் தொகுப்புதான் மனிதன். மனித உடலின் செல்கள் உருவாக அடிப்படை ஆதாரமாக இருந்தது பிரபஞ்ச ஆற்றல்தான். அந்த அடிப்படை ஆற்றலை பற்றியும், அதை பயன்படுத்தும் வழிமுறைகளைப் பற்றியும், அதனால் அடையக்கூடிய நன்மைகளைப் பற்றியும் இந்த புத்தகம் வாயிலாக தெளிவாகப் பார்க்க போகிறோம்.

மாஸ்டர் ராஜா முகமது காசிம்

Disclaimer: All images are copyright to their respective owners. Images used for educational purpose only. Thanks for the image owners.


Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.