மனிதர்களின் ஆரா - Aura


Aura - ஆரா 
ஆரா (Aura) என்பது மனித உடலை சூழ்ந்திருக்கும் ஒளிவட்டமாகும். இதை ஒளி உடல் என்றும் அழைப்பார்கள். ஆரா அதிர்வுகள் (vibration) மற்றும் அலைகளுடன் (waves) இணைந்து செயல்படுகிறது. இவை உடலின் தோலின் மேற்பரப்பில், ஒரு போர்வையைப் போன்று அமைந்துள்ளன. இவற்றை பூத கண்களால் சாதாரணமாக காண முடியாது ஆனால் அனைவராலும் இவற்றை உணர முடியும்.

இவை மனிதர்களின் மன நிலைக்கும், சிந்தனைக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப தனது நிறத்தையும், அதிர்வுகளையும் மாற்றிக் கொண்டே இருக்கின்றன. சக மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் தொடர்பு பாலமாகவும் இவை செயல்படுகின்றன. இவை ஒரு வகையில் மனிதர்களுக்கு சக்தி கவசமாகவும், பாதுகாப்பு கவசமாகவும் செயல்படுகின்றன.

 
(மனிதர்களின் ஆரா மாதிரிகள்)

எஎல்லா மனிதர்களாலும், விலங்குகளாலும் மற்றும் தாவரங்களாலும் ஆராவையும் அதன் அதிர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும். சில மனிதர்களை பார்த்ததும் அவர்கள் மீது நமக்கு மரியாதை உருவாவதற்கும், சிலர் மீது அன்பு உருவாவதற்கும், சிலர் மீது கோபம் உருவாவதற்கும், சிலர் மீது வெறுப்பு உருவாவதற்கும், சிலர் மீது அச்சம் உருவாவதற்கும் அவர்களின் ஆராவும், அலைகளும், அதிர்வுகளுமே காரணமாக இருக்கின்றன. அந்த நபர்களின் உண்மையான குணாதசியங்கள் நமக்கு தெரியாமல் இருந்தாலும், அவர்களின் ஆராவும், அலைகளும், அதிர்வுகளும் அவர்களின் உண்மையான குணத்தை காட்டி கொடுத்துவிடுகின்றன.

நாய்கள் ஒரு சிலரை கண்டதும் அமைதியாக இருப்பதற்கும். ஒரு சிலரை மட்டும் நாய்கள் எங்குக் கண்டாலும் குறைப்பதற்கும் அவர்களின் ஆராதான் காரணம். ஒரு சிலரை கண்டால் பூனைகள் அருகில் வந்து உரசுவதற்கும். சிலரிடம் மட்டும் விலங்குகளும், பறவைகளும், மீன்களும், சகஜமாக பழகுவதற்கும். ஒரு சிலரைக் கண்டால் அவை பயந்து ஓடுவதற்கும் அவர்களின் ஆராவின் தன்மை தான் காரணம். மனிதர்களின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும், ஏற்ப ஆரா மாறுதல் அடைவதனால் சக மனிதர்களும், விலங்குகளும், ஆராவின் மூலமாக மற்றவர்களின் எண்ணங்களையும் நோக்கங்களையும் புரிந்துகொள்கிறார்கள்.

எண்ணங்களினால் உண்டாகும் மாற்றங்கள் வெகுகாலம் நீடிக்கும் போது அவை ஆராவை பாதித்து அதில் குறைகள் உண்டாகவும், ஓட்டைகள் விழவும், கெட்ட அலைகள் அண்டவும், வழிவகுக்கின்றன. அதனால் ஆரா பாதிப்படைந்த பகுதியில் மனதளவிலும், உடலளவிலும், சக்தி நிலையிலும் குறைபாடுகளும், தொந்தரவுகளும், நோய்களும் உருவாக வாய்ப்பிருக்கின்றன. நமது எண்ணங்களும், வாழ்க்கை முறைகளும், குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும், மற்றும் வெளி நபர்களாலும் கூட ஆராவில் பாதிப்புகள் உண்டாக காரணமாகலாம். உணவையும், உறவுகளையும், நட்புகளையும், உணர்வுகளையும், சிந்தனையையும் பாதுகாப்பதும் ஒழுங்கு படுத்துவதும், நம் ஆராவை பாதுகாக்கும் வழியாகும்.

சில பயிற்சிகளின் மூலமாக ஆராவை பூத கண்களால் காணமுடியும். கிர்லியன் கேமராவின் மூலமாகவும் ஆராவை படம் பிடிக்கவும் முடியும்.

(கிர்லியன் கேமராவைக் கொண்டு பதிவு செய்யப்பட்ட ஆரா)

To Top