அமெரிக்காவில் ரெய்கி

திருமதி ஹவயோ ஹிரோமி தகத, அமெரிக்காவில் ஹவாயில் 1900 மாம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி பிறந்தார். ரெய்கி மேற்கத்திய நாடுகளில் பரவியதற்கும், இன்று உலகம் முழுவதும் பரவி பிரபல்யமாக இருப்பதற்கும் இவர் முக்கிய காரணமாவார்.

செவிவழி செய்திகளாக கூறப்படும் ஒரு சம்பவம். திருமதி தகத தனது குடும்பத்தாரை சந்திப்பதற்காக ஜப்பானுக்கு சென்றிருந்தார். ஜப்பானில் இருக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக அவர் நோய்வாய்ப் படுகிறார். அவரின் நோயை குணப்படுத்துவதற்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அறுவை சிகிச்சையில் உடன்படாத திருமதி தகத அதற்கு ஏதாவது மாற்று மருத்துவம் இருக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்.

அவரின் நோய்களை குணப்படுத்தக்கூடிய சரியான மருத்துவத்தை அறியாததால் இறுதியில் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்கிறார். அறுவை சிகிச்சைக்கு தயாராகும் போது அவரின் செவிகளில் “உன் நோய்க்கான மருத்துவம் தோக்கியோவில் இருக்கிறது அங்கே செல்” என்று ஒரு அசரீரி கேட்கிறது. உடனே அறுவை சிகிச்சையை ரத்து செய்துவிட்டு டோக்கியோவிற்கு புறப்படுகிறார். தோக்கியோவில் டாக்டர் ஹயாஷியின் கிளினிக்கில் ரெய்கி சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைகிறார்.

அன்றைய காலகட்டத்தில் ஜப்பான் பல போர்களில் கலந்து கொண்டிருந்தது. ஆண்கள் அனைவரும் கட்டாயமாக போர்களில் கலந்து கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தப் பட்டார்கள். ரெய்கி கலையை அறிந்த அத்தனை ஆண்களும் போரில் மடிந்துவிட்டால்; இந்த கலை அழிந்துவிடும் என்பதாலும், மேலும் வெளிநாட்டில் வாழும் பெண் என்பதாலும் டாக்டர் ஹயாஷி திருமதி தக்கதவுக்கு ரெய்கியை பயிற்சி அளித்தார். திருமதி தக்கத மூலமாக இந்த கலையை வெளிநாட்டில் பாதுகாக்க எண்ணினார்.

திருமதி தகத ரெய்கியை முழுமையாக கற்றுக்கொண்டு அமெரிக்கா திரும்பி அங்கு ஒரு ரெய்கி கிளினிக்கை தொடங்கினார். அவர் சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல் ஜப்பானியர் அல்லாதவர்களுக்கும் ரெய்கி கலையை கற்றுத்தரத் தொடங்கினார்.

அமெரிக்காவிலிருந்து இந்தக் கலை மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவியது. இன்று உலகம் முழுவதும் இலட்சக் கணக்கான மக்கள் ரெய்கியினால் பயன் பெற்று வருகின்றனர். அதன் வரிசையில் நீங்களும் இப்போது சேர்ந்துக் கொண்டீர்கள்.

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.