புதியவை
latest

முஸ்லிம்கள் நாய்களை வளர்க்கலாமா? கூடாதா?

முஸ்லிம்களுக்கு நாய்களை வளர்க்கக் கூடாது என்று அல்குர்ஆனில் எந்த ஒரு தடையும் இருப்பதாக தெரியவில்லை. மாறாக அல்குர்ஆன் நாய்களை வளர்ப்பதை அனுமதிக்கிறது. உஸ்தாஸ்கள், ஆலிம்கள் என்று தங்களை கூறிக் கொள்பவர்கள்தான் நாய்கள் வளர்ப்பதை தடை செய்கிறார்கள். நாய்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவை போன்ற ஒரு பிம்பம் மக்களிடையே இருப்பதினால், சிலர் நாய்களை துன்புறுத்துகிறார்கள், கொல்கிறார்கள். இது மிகப் பெரிய பாவமாகும். இதற்கு கடுமையான தண்டனையும் நிச்சயமாக இறைவனிடம் உண்டு.

...அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி (நாய்களுக்கு) , பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்;. எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன். (Al-Maaida: 4)

ஹதீஸ்களில் நாய் வளர்க்கக் கூடாது என்று இருப்பதாக கூறுகிறார்கள். அல்குர்ஆன் அனுமதித்த பிறகு எதற்காக ஹதீஸை பின்பற்ற வேண்டும்?. அல்குர்ஆனை விடவா ஹதீஸ் உயர்ந்தது?

உலக அரசியலை புரிந்துக்கொள்ளுங்கள்
ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது, இடைப்பட்ட காலத்தில் ஏதோ ஒரு இயக்கம், அல்லது ஒரு குழு முஸ்லிம்களை, கொல்வதற்கும், அடிமைப் படுத்துவதற்கு, நாய்கள் தடையாக இருக்கும் என்று அறிந்துக் கொண்டு. திட்டமிட்டு நாய்களை, ஹராம் நஜிஸ், என்று பரப்பி விட்டிருக்கிறார்கள். அல்குர்ஆனை ஆராய்ச்சி செய்யாத மக்களும், அவற்றை நம்பிக் கொண்டிருக்கிறார்கள், பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் முஸ்லிம்கள், கொல்லப்படுவதையும், துன்புறுத்தப்படுவதையும், வேதனை படுத்தப்படுவதையும், அடிமையாக்கப் படுவதையும், சூறையாடப் படுவதையும் அனுதினமும் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்க்கலாம். அவற்றில் வெளிப்படையாக காட்டப்படுபவை குறைவானவை மட்டுமே, நம் அறிவுக்கு எட்டாமல் இன்னும் அதிகமாக நடக்கின்றன.

சற்று சிந்தித்துப் பாருங்கள், இந்த வேதனைகளை அனுபவிக்கும் முஸ்லிம்கள் நாய்களை வளர்த்திருந்தால். கொல்லப்பட்ட, ஊனமான, துன்புறுத்தப்பட்ட, மானபங்கம் செய்யப்பட்ட, முஸ்லிம்களில் பாதி பேர்களாவது காப்பாற்ற பட்டிருப்பார்கள். உண்மையா? இல்லையா?. ஒரு மனிதர் துன்பப்படும்போது, மனிதர்கள் வேண்டுமானால் பயத்தினால் ஒதுங்கி நிற்கலாம், நாய்கள் நிற்குமா?. தன் உயிர் இருக்கும் வரையில் எஜமானனை காத்து நிற்காதா?. அதனால்தான் இஸ்லாமியர்களுக்கு நாய்கள் தடை.


உங்களை நீங்கள்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் 
ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், சிரியா, வங்கதேசம், மியான்மர், அவ்வளவு ஏன் நம் பக்கத்து மாநிலங்களில் எத்தனை முஸ்லிம்கள் கொல்லப் படுகிறார்கள். எத்தனை முஸ்லிம்கள், உடமைகளை இழந்து, உரிமைகளை இழந்து, மானம் இழந்து அலைகிறார்கள். அவர்களை ஏன் மலக்குகள் வந்து காப்பாற்றவில்லை?. அவர்களுக்கு உதவாத மலக்குமார்கள் உங்களுக்கு வந்து உதவுவார்கள் என்று இன்னும் நம்புகிறீர்களா?.

இந்த நம்பிக்கை தான் உண்மையான ஈமான் என்று சிலர் வாதிடுவார்கள். இது நம்பிக்கையல்ல, மூட நம்பிக்கை என்கிறேன் நான். உங்களுக்கு உதவிக்கும் பாதுகாப்பிற்கும் இறைவன் நாய்களை படைத்து துணைக்கு அனுப்பி விட்டான். அதை வளர்க்காமல் வானத்திலிருந்து உதவி வரும் என்று மேலேயே பார்த்துக் கொண்டிருப்பது உங்கள் தவறுதான்.

மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை. (Ad-Dukhaan: 38)

அத்தனை ஹதீஸ்களும் உண்மையல்ல
ஹதீஸ்களின் பெயரால் முஸ்லிம்கள் முட்டாள்கள் ஆக்கப்படுகிறார்கள் என்பது எனது கருத்து. நாய்களை வளர்ப்பது உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், உங்கள் வீட்டுக்கும், மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இருக்கிறாரா? இல்லையா? என்று தெரியாத, வருவாரா? வரமாட்டாரா? என்று தெரியாத மலக்குகள், வீடுகளில் நாய்களை வளர்த்தால் உள்ளே வரமாட்டார் என்ற வெறும் நம்பிக்கையின் அடிப்படையில், நாய்களை ஒதுக்குவது உங்கள் உடமைகளுக்கும், உயிருக்கும் ஆபத்தாக முடியும்.

நாய்கள் வளர்த்தால் மலக்குகள் வர மாட்டார்கள், இதுதானே பெரும்பாலானோர் கூறும் காரணமாக இருக்கிறது? அப்படி என்றால் நாய் வளர்க்காதவர்கள் வீடுகளில் மலக்குகள் வந்து ஆபத்துகளில் உதவுகிறார்களா? அவ்வாறான உதவிகளை பெற்றவர்கள் யாராவது உண்டா? நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அல்லது கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?

நாய்களை வளர்க்காத முஸ்லிம்களின் வீடுகளில் கொள்ளை, கொலை, கற்பழிப்பு, போன்ற கெட்ட விஷயங்கள் நடக்காமல் மலக்குகள் தடுக்கிறார்களா? அல்லது யாரையாவது மலக்குகள் வந்து காப்பாற்றி இருக்கிறார்களா? இவ்வாறு நடந்ததாக கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?. ஆனால் நாய்களை வளர்த்திருந்தால், கண்டிப்பாக அவை காப்பாற்ற முயற்சிகளை செய்திருக்கும் அல்லவா?. தனக்கு சம்பந்தம் இல்லாத எத்தனையோ நபர்களை குழந்தைகளை நாய்கள் காப்பாற்றியதாக நீங்கள் நாளிதழ்களில் வாசித்ததில்லையா? கேள்விப் பட்டதில்லையா?

எல்லாவற்றையும் அப்படியே நம்பாதீர்கள், சிந்தியுங்கள்
அல்குர்ஆனில் பலமுறை ஒலிக்கும் ஒரு வசனம், நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? சிந்திக்கும் சமுதாயமாக மாற மாட்டீர்களா? என்பதுதான். சிந்திக்க சொல்லி அல்குர்ஆன் தூண்டுகிறது, சிந்திக்கக் கூடாது, நபியை எதிர்த்து ஹதீஸை எதிர்த்து, அல்குர்ஆனை எதிர்த்து கேள்விகள் கேட்கக் கூடாது என்று நமது ஹஜ்ரத்கள் நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.

நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா? (As-Saaffaat: 155)

முஸ்லிம்களே வீட்டுக்கு இரண்டு நாய்களை வளர்க்க தொடங்குங்கள்
நாட்டு நாய்களை வளர்க முயற்சி செய்யுங்கள், நாட்டு நாய்கள் மட்டும்தான் விசுவாசமாக யாருக்கும் அஞ்சாமல், தன் உயிரைக் கொடுத்து எஜமானனை பாதுகாக்கும். அழகுக்காக இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு நாய்களை வாங்குவதும் வளர்ப்பதும் வீண் வேலையாகும்.

அல்குர்ஆனை பின்பற்றுகிறீர்களா? அல்லது மனிதர்களை பின்பற்றுகிறீர்களா? முடிவு உங்கள் கையில் தான் உள்ளது. ஒரு வேட்டை நாய் பிடித்து வரும் விலங்கை உண்ணலாம் என்றால், நாய் வளர்க்காமல் அதை செய்ய முடியுமா?. நாய்களை வளர்க்கக் கூடாது என்றால் இந்த வசனத்தை அல்லா இறக்கி வைக்க தேவையே இல்லையே.

இந்தக் கட்டுரையை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை. மக்களை சிந்திக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது. சிந்தியுங்கள்.



« PREV
NEXT »

1 comment

  1. கண்ணியத்திற்குரிய சகோதரரே நாய் வளர்ப்பு சம்பந்தமாக தாங்கள் கூறிய வசனங்கள் சரிதான் ஆனால் நாய் சாதாரணமாக வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது வேட்டைக்காக வேண்டியும் பாதுகாப்புக்காக வேண்டியும் நாய் வளர்ப்பது தடை செய்யப்படவில்லை இந்த கட்டுரையில் ஹதீஸ் பின்பற்றத் தேவையில்லை என்று பொதுவாக கூறப்பட்டுள்ளது ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் குர்ஆனும் நமக்கு வானிலிருந்து நேராக இறங்கவில்லை நபியவர்கள் மொழியின் மூலமாகத்தான் குர்ஆன் இறங்கியுள்ளது எனவே குர்ஆன் இது இறைவனின் வேதம் அந்த குர்ஆனே நபியவர்களின் பேச்சுக்கள் அனைத்தும் இறைவன் புறத்திலிருந்து ஏற்படுபவை தான் இவர் பேசுவது அனைத்தும் இறைச்செய்தி தான் இன்று அந்நஜ்ம் என்ற அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது உங்களுடைய நபி எதையெல்லாம் கட்டளையிடுகிறார் அவற்றையெல்லாம் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் எதையெல்லாம் விட்டு தடுக்கின்றாரோ அவற்றை விட்டு முற்றிலும் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று குர்ஆன் தான் கட்டளையிடுகின்றது நீங்கள் இறைவனை விரும்புபவர்களாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறுவீராக என்று அல்லாஹ் ஸூரா ஆல இம்ரானில் கூறுகிறான் கட்டுரையில் நீங்கள் ஹதீசை மறுப்பது இறை மறுப்பாகும் கலிமாவின் லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற கலிமாவின் இரண்டாம் பகுதியை முற்றிலும் மறுப்பதாகும் முஸ்லிம் என்பவர் இறைவனை ஏற்பது மட்டுமல்ல இறைத் தூதரையும் ஏற்க வேண்டும் இறைத்தூதரை விளங்காமல் இறைவனை விளங்க முடியாது என்பதும் நிதர்சனம் எனவே கட்டுரைகள் ஷரியத் அடிப்படையில் தவறானது!! போகிற போக்கில் ஹஜ்ரத்மார்களை நீங்கள் சாடுகிறீர்கள்!! அவர்கள் யார் என்றால் குர்ஆனை தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பதை, கற்றுக் கொடுப்பதற்காக தனது வாழ்க்கையை ஒதுக்கிக் கொண்டவர்!! அர்ப்பணம் செய்தவர்களுக்கு கூறப்படும், ஆலிம்கள் இல்லையென்றால் உங்களுக்கு குர்ஆனை கற்றுக் கொடுத்தது யார் அதை தமிழில் மொழி பெயர்ப்பது யார் எனவே உலமாக்களை திட்டுவது நயவஞ்சக தனமாகும் ஈமானுக்கு மாற்றமான செயலாகும் குர்ஆன் மற்றும் ஹதீஸுடைய கல்வியை இழிவு படுத்துவதாகும்

    ReplyDelete