மெய் ஞானம் என்பது என்ன?

ஞானம் என்பது என்ன? அதை எவ்வாறு அடைவது? என்று பலருக்கு கேள்விகள் இருக்கலாம். ஞானம் அடைவதற்கு பல வகையான முயற்சிகளையும், பயிற்சிகளையும், பலர் மேற்கொண்டு வந்துள்ளனர். இதில் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள் என்பதை பார்த்தால், மிக சொற்பமான நபர்கள் மட்டுமே ஞானம் அடைந்துள்ளனர். ஞானம் என்பது அடைவதற்கு மிக கடுமையான விஷயமா என்றால் நிச்சயமாக கிடையாது.

ஞானமடைய முயற்சி செய்த பலர் இறுதி வரையில் எதையுமே அடையாமல் மரணித்ததற்கு காரணம், பலர் ஞானம் என்பது ஏதோ ஒரு வித்தை அல்லது ஒரு சக்தி என்று எண்ணுகிறார்கள். ஞானம் என்பது அடையக்கூடிய ஒரு விஷயம் அல்ல. ஞானம் என்பது ஒரு தெளிவு நிலை மட்டுமே என்பது உணராததால், அவர்கள் ஞானத்தை தேடிக்கொண்டே இருந்துவிட்டார்கள்.

உண்மையான ஞானம் என்பது என்னவென்று சொல்லட்டுமா? “அடைவதற்கு இந்த உலகில் எதுவுமே கிடையாது” என்பதை உணரும் தெளிவு நிலைதான் ஞானம்.

உதாரணத்துக்கு இந்தியக் கலாச்சாரத்தில் துறவிகளை, மிகவும் மரியாதையுடனும், மதிப்புடனும் நடத்துவார்கள். இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் துறவிகள் மிகவும் மதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் மனித வாழ்க்கையில் மனிதன் அடையக்கூடிய உச்சக்கட்ட தெளிவான, உச்சக்கட்ட ஞானமான, துறவு என்பதை அவர்கள் அடைந்து விட்டார்கள். துறவு என்பது என்னவென்றால், இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை, எதுவுமே உண்மை இல்லை, என்ற ஞானத்தை பெறுவது தான் துறவு. குடும்பத்தை விட்டுவிட்டு காட்டுக்கு செல்வதோ, பிச்சை எடுப்பதோ ஆசிரமத்தில் சேருவதோ, துறவு அல்ல. புத்தர் குடும்பத்தை விட்டுச் சென்றாரே, பிச்சை எடுத்தாரே, காட்டில் வாழ்ந்தாரே என்று கேட்பவர்களுக்கு சொல்கிறேன்; நாம் புத்தர் அல்ல.

குடும்பத்தைத் துறந்து, பிச்சை எடுத்து, காட்டில் வாழ்ந்த புத்தர் யாரையுமே அவ்வாறு செய்ய சொல்லவில்லை. புத்தர் ஞானம் அடைவதற்கு முன்பாக புத்த மதத்தில் சேர்ந்து, அப்போது புத்த மதத்தில் இருந்த வழக்கமான துறவு வாழ்க்கையைத் தான் அவர் பின்பற்றினாரே ஒழிய; காட்டில் வாழும் துறவு முறை என்பது புத்தர் உருவாக்கியது அல்ல. புத்தர் ஞானம் அடைந்த பின்பு மக்களோடு மக்களாக நாட்டில் தான் வாழ்ந்தார். குடும்பத்துடன் வாழ்ந்தாலும், சமுதாயத்தில் இருந்தாலும், தான் ஒரு தனி உயிர் என்ற உணர்வுடன் வாழ்வது தான் துறவு.

இந்த உலக ஆசைகளுக்கு அடிமையாகி, மன இச்சைகளை, தீர்த்துக் கொள்ள, இந்த வாழ்க்கையை பயன்படுத்தாமல். இந்த வாழ்க்கையில் பற்று வைக்காமல், அடுத்த பிறவியை நோக்கி பற்றில்லாமல் முன்னேறுவதுதான்; மிக உயரிய ஞானமாக இருப்பதால்; அந்த ஞானத்தை அடைந்த துறவிகளை இந்திய சமுதாயம் மிகவும் மதித்துப் பாராட்டியது.

மீண்டும் ஞானத்துக்கு வருவோம். ஞானம் என்பது அடையக்கூடிய ஒரு பொருளோ பயிற்சி செய்ய வேண்டிய ஒரு விஷயமோ கிடையாது. ஞானம் அடைவது எவ்வாறு என்று பார்த்தால், ஞானம் அடைவது முதலில் நம்மில் இருந்துதான் தொடங்க வேண்டும். இறைவன் நம் உடலை எவ்வாறு படைத்திருக்கிறார், என்பதை முதலில் கவனிக்க வேண்டும். உணர வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும். மனம், புத்தி, மற்றும் உயிர் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.

அடுத்ததாக நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள், நம் குடும்பத்தார்கள், உறவினர்கள், நண்பர்களை ஆராய வேண்டும். அவர்கள் எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறார்கள்? என்னென்ன குணாதிசயங்களுடன் படைக்கப்பட்டிருக்கிறார்கள்? அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? அவர்களுக்கும் நமக்கும் என்ன உறவுகள் ஏற்படுகின்றன? எப்படி ஏற்படுகின்றன? என்ன உணர்வுகள் ஏற்படுகின்றன? ஏன் அந்த உணர்வுகள் ஏற்படுகின்றன? இவையெல்லாம் ஏன் ஏற்படுகின்றன என்பதை சிந்திக்க வேண்டும், ஆராய வேண்டும்.

அடுத்ததாக நம்மை சுற்றி இருக்கும் விலங்குகள். அவை எவ்வாறு படைக்கப்பட்டிருக்கின்றன? அவை எவ்வாறு வாழ்கின்றன? எவ்வாறு அன்பு கொள்கின்றன? என்பன போன்ற விஷயங்களை ஆராய வேண்டும்.

அடுத்ததாக இயற்கை. மரம், செடி, கொடி, தாவரங்கள், பூச்செடி போன்றவற்றை கவனிக்க வேண்டும். பூக்கள் எவ்வாறு மலர்கின்றன? இலைகள் எவ்வாறு காய்கின்றன? காய்ந்த இலைகள் எவ்வாறு உதிர்கின்றன? அதன் வேர்கள் எவ்வாறு ஆழமாகச் செல்கின்றன? போன்றவற்றை கவனிக்க வேண்டும், ஆராயவேண்டும்.

அடுத்ததாக வானம், பூமி, நிலா, சூரியன், கோள்கள், நட்சத்திரங்கள், போன்றவை, எவ்வாறு படைக்கப்பட்டு இருக்கின்றன? அவை எவ்வாறு இயங்குகின்றன? என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

ஞானம் அடைய ஒரே வழி, நம்மை சுற்றி இருக்கும் அத்தனை உயிர்களும், அத்தனை படைப்புகளும், எவ்வாறு படைக்கப்பட்டன, என்பதை உணர்ந்து கொள்வதுதான்! அறிந்து கொள்வதில்லை. மீண்டும் சொல்கிறேன் அறிந்துகொள்வது அனைவராலும் முடியும், உணர்வுதான் ஞானம். அறிந்து கொள்வதற்கும் உணர்ந்து கொள்வதற்கும் என்ன வித்தியாசம் என்றால் உடலுக்கும் உயிருக்கும் உள்ள வித்தியாசம்

ஒரு பூனை எவ்வாறு வாழ்கிறது என்பதை யார் வேண்டுமானாலும் பார்த்து அல்லது படித்து தெரிந்து கொள்ளலாம் ஆனால் பூனையாக பிறப்பு எடுத்தால் மட்டுமே பூனை என்றால் என்ன என்பதை ஒரு உயிரால் உணர்ந்து கொள்ள முடியும்.

எதையாவது அடைவதல்ல ஞானம் “அடைவதற்கு இந்த உலகில் எதுவுமே இல்லை என்ற தெளிவுதான் ஞானம்”. அறிந்து கொள்வது அறிவு உணர்ந்து கொள்வது ஞானம்.

Image by Marisa04 from Pixabay
To Top