இறைவன் பேதம் பார்ப்பதில்லை
இயற்கை பேதம் பார்ப்பதில்லை
இந்து, முஸ்லிம், கிருத்தவன்
பௌத்தன், சமணன், நாத்திகன்
என எந்த பேதமும் இல்லாமல்

பசி, தாகம், தூக்கம்
அனைவருக்கும் உண்டு
பிறப்பும் இறப்பும்
அனைவருக்கும் சமமே

நோய்களும், மரணமும்
இன்பமும், துன்பமும்
சலுகைகள் வழங்குவதில்லை

சூரியன் அனைவரையும் சுடும்
நிலா அனைவரையும் காயும்
மழை அனைவரையும் ஈரமாக்கும்
நிலம் அனைவரையும் தாங்கும்

சுனாமி வந்தது
இந்து, முஸ்லிம், கிருத்தவன்
பௌத்தன், சமணன், நாத்திகன்
என எந்த பேதமும் இல்லாமல்
அனைவரும் சமமாக
மிதந்தனர் பிணமாக

நிலநடுக்கம் வந்தது
கோயில், மசூதி
தேவாலயம், புத்தவிகாரம்
என எந்த பேதமும் இன்றி
சிதைந்து வீழ்ந்தன
மண்ணின் மடியில்

இயற்கை பேதம்
பார்ப்பதில்லை
சலுகைகள்
வழங்குவதில்லை

வெள்ளம் வந்தது
அலையா விருந்தாளியாக
இந்து, முஸ்லிம், கிருத்தவன்
பௌத்தன், சமணன், நாத்திகன்
அனைவர் வீட்டிலும்

கோயிலின் பூசாரி
மசூதியின் இமாம்
தேவாலயத்தின் ஆயர்
புத்ததுறவிகள்
யாருக்கும் சலுகையில்லை

இன்பமும், துன்பமும்
நோயும், மரணமும்
அனைவருக்கும் சமமே

இந்து, முஸ்லிம், கிருத்தவன்
பௌத்தன், சமணன், நாத்திகன்
யாருக்கும் சலுகையில்லை
அனைவரையும்

துப்பாக்கிகள் சுடும்
அருவாள்கள் வெட்டும்
விஷங்கள் கொள்ளும்

அனைவருக்கும்
பிறப்பு முதல்
இறப்பு வரையில்
ஒரே நியதிதான்

நீ எதில் உயர்ந்தவன்?
உன் மதம் எதில் உயர்ந்தது?

இந்து, முஸ்லிம், கிருத்தவன்
பௌத்தன், சமணன், நாத்திகன்
அனைவர் வாயிலும்
மண்ணள்ளி தான் போடுவார்கள்
இறந்த பிறகு

அனைவர் உடலும்
மண்ணுக்குத்தான்
இரையாகும்

கண்டிப்பாக மரணமடையும்
மனிதர்கள் - உயிர்
பிரியும் வரையிலாவது
உயிரோடு இருக்கலாமே

நீ எதை வேண்டுமானாலும்
நம்பிக்கை கொள்
நீ எதை வேண்டுமானாலும்
வழிபாடு செய்

பயணங்கள் வெவ்வேறாக
இருக்கும்போது
பாதைகள் வெவ்வேறாகத்
தானே இருக்கும்

உன் வழி உனக்கு
அவர் வழி அவருக்கு

மதங்கள் மனிதர்களை
காக்க வேண்டுமே ஒழிய
மனிதர்கள் மதங்களை
காக்கத் தேவையில்லை

கடவுள் நம்பிக்கை
உள்ளவன்தான்
அடுத்த கடவுள்
நம்பிக்கையாளனை
கொல்கிறான் - கடவுளின்
பெயர்கள் மாறுபடுவதால்

ஆதியும் அந்தமும் இல்லா
அகிலாண்ட கோடி
பிரம்மாண்ட நாயகன்
இறைவன்

அவனுக்கு பல பெயர்கள்
இருக்கக் கூடாதா?
இறைவனை ஏன் - ஒரு
கூட்டுக்குள் அடைகிறீர்கள்?
முடியுமா உங்களால்?

கடவுளின் பெயரால்
மனிதர்கள் செய்யும்
அயோக்கியத்தனங்கள்
கடவுளுக்கே பொறுக்காது

உலகத்து ஜீவராசிகளில்
மிகவும் - முட்டாளானது
மனித இனம்தான்

இறைவன் செய்த
மிகப்பெரிய தவறு
மனிதர்களைப் படைத்ததுதான்

மனிதர்களின்
ஆறாம் அறிவு
வரமல்ல சாபம்

விலங்குகளை பார்த்தாவது
வாழப் பழகிக்கொள்ளுங்கள்

அன்புடன் வாழ்வது மட்டுமே
நீ மனிதன் என்பதற்கு
அத்தாட்சி