பிள்ளையின் தாயானவள் வீட்டின் வாசலில் அண்டை வீட்டாருடன் பேசிக் கொண்டிருந்தாலும். அல்லது உறங்கிக் கொண்டிருந்தாலும், தொட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தை விழித்துக் கொண்டால். அதை அந்த தாய் உணர்ந்துகொள்கிறாள். வீட்டில் சமைத்து கொண்டிருக்கும் தாய், பல வேளைகளில் மூழ்கி இருந்தாலும் பிள்ளையின் பள்ளி வாகனம் வீட்டின் வாசலை நெருங்கும் போதே அவள் அதை உணர்ந்து கொள்கிறாள்.

கணவன் ஒரு சிக்கலில், சிக்கிக் கொண்டிருக்கும் வேளைகளில், அல்லது கவலையில் இருக்கும் போது, மனைவியே சுயமாக அதை உணர்ந்து கொள்கிறாள். மனைவி ஒரு குழப்பத்தில் இருக்கும் போது, கணவன் அதை உணர்ந்து கொள்கிறான். பெற்றோர்களின் பிரச்சனைகளை பிள்ளைகள் உணர்ந்துக் கொள்கிறார்கள். பிள்ளைகளின் பிரச்சனைகளை பெற்றோர்கள் உணர்ந்துக் கொள்கிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலும் மற்ற குடும்ப உறுப்பினர்களின் மனநிலையை எளிதாக புரிந்துக் கொள்கிறார்கள்.

தாத்தா, பாட்டி, சொந்தங்கள், பந்தங்கள், அன்பர்கள், நண்பர்கள், என நம்மை சுற்றியிருக்கும் அத்தனை மனிதர்களுடனும் சூட்சமமான நிலையில் நாம் தொடர்பில் இருக்கிறோம். மனம் என்பது உடலுக்கு வெளியிலும் பரவக்கூடியது. வெளியிலிருந்தும் தகவல்களை கிரகிக்கக் கூடியது. மனம் வீடு முழுவதும் பரவி இருப்பதனால் மற்ற குடும்ப உறுப்பினர்களின் மனநிலையை நம்மாலும், நம் மனநிலையை மற்றவர்களாலும் வாய் திறந்து சொல்லாமலேயே எளிதாக புரிந்துக்கொள்ள முடிகிறது.

குடும்ப உறவுகளுக்குள் அன்பும் நெருக்கமும் குறைந்துவருவதனால். சொல்லாமலேயே மனநிலையை உணர்ந்துக்கொள்ளும் இயல்பை பல குடும்ப உறுப்பினர்கள் இழந்துவருகின்றனர். சில காலங்களுக்கு முன்பு வரையில் கடல் கடந்து வாழும் பிள்ளைக்கு உடல் நலமில்லை என்றாலும் இந்தியாவில் வாழும் தாயால் அதை உணர்ந்துக்கொள்ள முடிந்தது. ஆனால் இன்று சில தாய்களுக்கு கூட உடன் வாழும் பிள்ளைகளின் மனதை புரிந்துக்கொள்ள கூட இயலவில்லை. அந்த அளவுக்கு உருவுகளுக்குள் விரிசல்கள் உண்டாகிவிட்டன.

நான், எனது, என் வாழ்க்கை, என் குடும்பம் என்று தங்களின் வாழ்க்கையை சுருக்கிக் கொண்டிருப்பதால் மனிதர்களுக்கிடையிலான நெருக்கமும் உறவும் குறைந்து விட்டன. குடும்ப உறவுகளுடன் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும் போது மனோசக்தியும் மனதாலே உணர்ந்துக்கொள்ளும் தன்மையும் அதிகரிக்கும். இல்லையேல் கால போக்கில் இந்த மனோசக்தி அறவே அழிந்துவிடும்.