உணவுகள் எளிதாக ஜீரணமாக சில வழிமுறைகள்

முன்பெல்லாம் உணவு வேளைகளில் இனிப்பான பழங்கள் உட்கொள்வதை ஒரு பழக்கமாக வைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். என் தாத்தா கூட உணவுக்கு முன்பு அல்லது பின்பு வாழைப்பழங்களை உட்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் இன்றைய தலைமுறையில் உணவுக்கு முன்பாக பழங்களை உட்கொள்ளும் பழக்கம் முற்றாக ஒழிந்துவிட்டது என்று கூட கூறலாம். உணவு வேளைகளில் இனிப்பு உட்கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள் கூட இனிப்பான பழங்களுக்கு பதிலாக இனிப்பு பலகாரங்களை உட்கொள்ள தொடங்கிவிட்டார்கள்.

உணவை பரிமாறிய பின்னர் இனிப்பு வகைகள் பரிமாறப்படுவதை இன்றும் நாம் விருந்துகளில் காணலாம். விருந்துக்கு பின்னர் பாயாசம், இனிப்பான கஞ்சி அல்லது பலகாரங்கள் பரிமாறப்படுகின்றன. ஒரு சிலர் மட்டுமே விருந்துகளில் பழங்களை பரிமாறுகிறார்கள். பழங்களின் முக்கியத்துவம் இன்றைய மனிதர்களுக்கு தெரியவில்லை என்றே கூறலாம்.

ஜீரணத்துக்கு உதவும் இனிப்பு சுவை
சிலர் மதிய உணவை உட்கொண்ட பின்னர் உணவு ஜீரணமாகாமல் சிரமப்படுவார்கள். குறிப்பாக விருந்துகளில் உணவு உண்டவர்களும், அதிகமாக உணவு உண்டவர்களும், உணவை ஜீரணிக்க முடியாமலும் மூச்சுவிட முடியாமலும் சிரமப்படுவார்கள். இவ்வாறு சிரமப்படும் சிலர் சோடா, செவனப், பெப்சி, கோல, லெமன் ஜூஸ், பழ ஜூஸ், இஞ்சி சாறு, அல்லது டீ அருந்தும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள்.

உணவை உட்கொண்ட பின்னர் இனிப்பான பானங்களை அருந்தினால் மட்டுமே அவர்களின் வயிறு லேசாக இருப்பதாக உணர்வார்கள். இல்லையென்றால் வயிற்றில் ஜீரணம் நடக்காததைப் போன்றும், வயிறு கனப்பதைப் போன்றும், மூச்சுவிட சிரமப்படுவதைப் போன்றும் உணர்வார்கள். உண்மையில் அவர்களின் ஜீரண மண்டலம் பலகீனமாக உள்ளது அதனால்தான், உணவு உட்கொண்ட பின்னர் உறக்கம் உண்டாவது, சோர்வு உண்டாவது, வயிறு பாரமாக இருப்பது, வயிறு உப்புசம், மூச்சுவிட சிரமம், போன்று பல சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.

மேலே குறிப்பிடப்பட்ட செரிமான குறைபாடுகள் உள்ளவர்களுக்கு உதவியது அவர்கள் அருந்திய பானங்கள் அல்ல, மாறாக அவற்றில் கலந்திருக்கும் இனிப்பு சுவையே. செரிமானம் முழுமையாக நடைபெற இனிப்பு சுவை மிகவும் அவசியமானது. அதனால்தான் நம் முன்னோர்கள் உணவு வேளைகளுக்கு முன்பாக பழங்களை உட்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

முறையாக ஜீரணமாகாத உணவுகள் தான் வயிற்றிலும் குடலிலும் தேங்கி பல நோய்களை உருவாகுகின்றன. செரிமானம் முறையாக நடைபெற பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
  1. பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள் அதுவும் பசிக்கு தகுந்த அளவோடு சாப்பிடுங்கள்.
  2. எளிதாக ஜீரணிக்க கூடிய உணவுகளையும் உடலுக்கு ஒத்து போகும் உணவுகளையும் மட்டுமே உட்கொள்ளுங்கள்.
  3. உணவை நன்றாக மென்று விழுங்குங்கள்.
  4. சாப்பிடும் போது உணவில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
  5. சாப்பிடும்போது தண்ணீர் அருந்தாதீர்கள்.
  6. உணவு உட்கொண்டு 30 நிமிடங்கள் கழித்து தான் தண்ணீர் அருந்த வேண்டும்.
  7. உணவை உட்கொள்வதற்கு முன்பாக சிறிது இனிப்பான பழங்களை உட்கொள்ளுங்கள்.
இனிப்பு சுவை மண்ணீரலை பலப்படுத்தி செரிமானம் சுலபமாக நடைபெற உதவும். அதுவும் இனிப்பான பழங்களை உட்கொள்வது மிகவும் நல்லது. செரிமானம் முறையாக நடைபெறும், உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கும். இந்த பழக்கத்தை உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்.

உணவை உட்கொண்ட பின்னர் சோடா, செவனப், பெப்சி, கோல, டீ, காபி அருந்தும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். அதற்கு பதிலாக பழங்களை சாப்பிடலாம், பழ ஜூஸ், லெமன் ஜூஸ் போன்றவற்றை அளவாக அருந்தலாம்.


To Top