புதியவை
latest

மனிதர் எதை தேடி ஓடி கொண்டிருக்கிறார்கள்?

ஜென் மார்க்கத்தில் ஒரு தத்துவம் இருக்கிறது. “நீங்கள் மலையின் மீது காணும் ஞானம் கீழிருந்து எடுத்து சென்றதுதான்” என்பதுதான் அந்த தத்துவம். இதன் பொருள் “ஞானத்தை நீங்கள் எங்கேயும் தேடி கண்டுபிடிக்க முடியாது” என்பதாகும். அதைப்போல் நீங்கள் ஞானத்தை தேடி எங்கும் செல்லத் தேவையில்லை அது உங்களுக்குள்ளே தான் இருக்கிறது என்றும் பொருளாகும்.

இந்த உலகத்தில் ஏழைகள் முதல் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் வரையில். அடிமைகள் முதல் உயரிய அதிகாரத்தில் உள்ளவர்கள் வரையில் அனைவருக்கும் உள்ளுக்குள் ஏதோ ஒரு தேடல் இருக்கும். பெரும்பாலான நேரங்களில் பெரும்பாலான நபர்களுக்கு அவர்கள் என்ன தேடுகிறார்கள்? ஏன் தேடுகிறார்கள்? என்பது விளங்குவதில்லை. ஆனால் மனம் எதையோ தேடி அலைகிறது என்பது மட்டும் விளங்கும். மனம் எதை தேடுகிறது என்பதை உணராததால் சிலர் தவறான இடங்களில் சென்று சிக்கிக் கொள்கிறார்கள்.

எனக்கு 14 வயது இருக்கும்போது எனக்குள் தேடல்கள் உருவாக தொடங்கின. நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? நான் ஏன் இந்த பூமிக்கு வந்தேன்? நான் எப்படி இந்த பூமிக்கு வந்தேன்? என்னை யாராவது படைத்தார்களா? படைத்திருந்தால் என்னை ஏன் படைத்தார்கள்? இறைவன் என்று ஒருவர் உண்டா? சொர்க்கம் நரகம் என்பவை இருக்கின்றனவா? சொர்க்கம் நரகம் என்பவை இருந்தால் நான் தவறு செய்ய எல்லா வாய்ப்புகளையும் சக்தியையும் கடவுளே கொடுத்துவிட்டு அந்த தவற்றை செய்த பிறகு என்னை ஏன் நரகத்தில் போடவேண்டும்? மனிதர்கள் எந்த தவறும் செய்யாமல் ஒழுக்கமாக வாழக்கூடிய வகையில் இறைவனால் அவர்களை படைக்க முடியுமா? முடியாதா? முடியுமென்றால் ஏன் அவ்வாறு படைக்கவில்லை?

இன்னும் பல நூறு கேள்விகள் என்னுள் எழுந்தன அந்த கேள்விகளுக்கு விடை தேடி பயணித்ததில் பலவற்றை கற்றுக் கொண்டேன். சில தெளிவுகளையும் அடைந்தேன். அவற்றிலிருந்து சிலவற்றை தான் என் கட்டுரைகள் மூலமாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மனம்தான் மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்று கூறுவார்கள். இவ்வாறு சொல்வதற்கு காரணம் மனிதர்களின் மனம் எதிலும் திருப்தி அடைவதில்லை. மனம் பெரும்பாலான நேரங்களில் திருப்தி அடையாமல் மேலும் மேலும் தேடி அலைவதற்கு காரணம் நாம் மனதை புரிந்து கொள்ளாமல் இருப்பது தான். மனம் எதை நாடுகிறது? எதைத் தேடுகிறது? என்று தெளிவாக கவனித்து புரிந்து கொள்ளாமல். நம் மனதில் இருக்கும் வாழ்க்கை பதிவுகளின் அடிப்படையிலும், நம்பிக்கைகளின் அடிப்படையிலும், வாழ்க்கை முறைகளின் அடிப்படையிலும், மனதை திருப்திப்படுத்த முயலும் போது மனம் ஒருகாலும் திருப்தி அடைவதில்லை.

நம் உயிரில் ஒரு தேடல் தொடங்கும் போது அல்லது ஒரு தேடல் உருவாகும் போது மனம் அதற்கு உறுதுணையாக சேர்ந்து செயல்படுகிறது. உயிரின் தேவைகளையும், தேடல்களையும் பூர்த்தி செய்யாமல் நம் இச்சைகளை மட்டுமே பூர்த்தி செய்ய முயல்வதனால்; மனம் திருப்தி அடையாமல் மேலும் மேலும் தேடி அலைந்து கொண்டிருக்கிறது. நம் மனதிலும் அமைதி குறைகிறது. எந்த ஒன்றை சிந்திக்கும் போது, நினைத்துப் பார்க்கும்போது, அனுபவிக்கும் போது, வாசிக்கும் போது மனம் மகிழ்ச்சிக்கு பதிலாக அமைதியை அடைகிறதோ அதுதான் உண்மையில் உங்கள் உயிர் தேடும் பொருள் என்று அர்த்தம். மனதுக்கு அமைதியையும் சமாதானத்தையும் அளிப்பவை மட்டுமே மனம் தேடும் உண்மையான பொருளாகும்.


« PREV
NEXT »

No comments