மனதினில் தேங்கக்கூடிய ஒவ்வொரு கெட்ட உணர்ச்சிகளும் உடலில் சில பாதிப்புகளை  ஏற்படுத்தக் கூடும். உணர்ச்சிகள் மனதில் தோன்றுவதும் பின் மறைவதும் மனித இயல்புதான். ஆனால் தோன்றிய  உணர்ச்சிகள் மறையாமல்  மனதிலேயே தேக்கம் கொள்ளும்போதும், பல நாட்களுக்கு தொடர்ந்து மீண்டும் மீண்டும் தோன்றும் போதும்  அவை  உடலின் உறுப்புகளை, பாதித்து நோய்களை உருவாக்க வாய்ப்பிருக்கிறது.

உணர்ச்சிகளும் அவை பாதிக்கும் உடலின் பகுதிகளும்

உணர்ச்சிகள் / பாதிக்கும் உறுப்புகள்

ஆணவம், கர்வம், திமிர், தற்பெருமை
இருதயம், சிறுகுடல், இரத்த நாளங்கள், மூட்டுக்கள், நாக்கு

கவலை, துக்கம்
மண்ணீரல், வயிறு, தசைகள், இடுப்பு, கீழ் உதடு

ஏக்கம், பற்று
நுரையீரல், பெருங்குடல், தோல், முடி, மூக்கு, தோள்பட்டை

அச்சம், பயம், காமம்
சிறுநீரகம், சிறுநீர் பை, எலும்புகள், கர்ப்பப்பை, ஆண்மை, காது

பொறாமை, எரிச்சல், கோபம்
கல்லீரல், பித்தப்பை, தசை நார்கள், கண்கள்

மேலே கூறப்பட்ட உணர்ச்சிகள் அதன் தொடர்புடைய உறுப்புகளையும், உடலின் பகுதிகளையும், பாதிப்புக்குள்ளாக்கி, அவற்றை பலகீனமாக்கி, அவற்றில் நோய்களை தோன்றச் செய்ய வாய்ப்பிருக்கிறது. இவைப் போன்ற உணர்ச்சிகள் அடிக்கடி தோன்றக்கூடியவர்கள், இவ்வாறான உணர்ச்சிகள் தோன்ற காரணம் என்ன, என்பதை ஆராய்ந்து. அவ்வாறான உணர்ச்சிகளை தூண்டக்கூடிய, உருவாக்கக் கூடிய செயல்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்ட உறுப்புகளில் சக்தி குறைவுகள் ஏற்பட்டாலோ அல்லது கழிவுகள், இரசாயனங்கள் தேக்கம் கொண்டாலோ, அதன் தொடர்பான குணங்களும் உணர்ச்சிகளும்  உருவாக வாய்ப்புகள் உள்ளன.

மேலே குறிப்பிட்ட உடலின் பகுதிகளில் தொந்தரவுகளும், பாதிப்புகளும் உள்ளவர்கள், மேலே குறிப்பிட்ட குணங்களும், உணர்ச்சிகளும் அவர்களிடம் இருக்கின்றனவா என்பதைப் பார்த்து, ஆராய்ந்து அவற்றை மாற்றிக் கொண்டால் அந்த பாதிப்புகளில் இருந்து உடல் விடுபட்டு ஆரோக்கியத்தை மீட்டுத்தரும். மேலே குறிப்பிட்ட குணங்கள், அதன் தொடர்புடையது மட்டுமில்லாமல். மற்ற உறுப்புக்களையும் பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.

மனித உடலில் எந்த பாகம் சீர் கெட்டாலும், எந்த நோய் தோன்றினாலும். மனம் மட்டும், நம்பிக்கையை இழக்காமல் தைரியமாக இருந்தால், உடலின் அத்தனை தொந்தரவுகளில் இருந்தும் மீண்டு, மீண்டும் நல்ல சுகம் பெறலாம். மனதின் பதிவுகளும், நம்பிக்கைகளுமே ஒரு மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. மனம் மாசு படாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மனதை எந்த நேரத்திலும் அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.