கேள்வி பதில்
கேள்வி பதில்

மன அழுத்தம், சோர்வு, கவலை மற்றும் வேதனைகளுக்கு காரணங்களும் தீர்வுகளும்

மனிதர்களின் மனங்களில் உருவாகும் அழுத்தம், சோர்வு, கவலை, வேதனை, அத்தனையும் வெளியில் இருந்து வருபவைதான். மனதில் உருவாகும் இந்த மாற்றங்களுக்கும், தொந்தரவுகளுக்கும், அவற்றை அனுபவம் செய்யும் நபர்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இருப்பதில்லை. யாரோ ஒரு மனிதர் செய்த தவறுகளை நினைத்து, இவர்கள் வேதனைகளை அனுபவம் செய்கிறார்கள்.

யாரோ செய்த தவறுகளுக்கு நாம் ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்? என்று சிந்திக்காமல். மற்றவர்கள் செய்த செயல்களை நினைத்து-நினைத்து தன்னை வருத்திக் கொண்டு. தன் மனதை கெடுத்து, தனது ஆரோக்கியத்தையும் சீர்கெடுத்துக் கொள்கிறார்கள்.

மன அழுத்தம்
மன அழுத்தம் உள்ளவர்கள், குடும்ப வாழ்க்கை, வேலை சூழல், சமுதாயம் பிரச்சனைகள், சமுதாய அமைப்பு, என்று எந்தக் காரணத்தை முன் வைத்தாலும். இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது, தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் மனப்பான்மை தான்.

யாரோ ஒரு நபர் பேசிய வார்த்தைகளும், செய்த செயல்களும், சிலருக்கு மன அழுத்தத்தை உருவாக்கலாம். யாரோ ஒரு நபரிடம் உள்ள திறமையோ, செல்வமோ, பொருளோ, தன்னிடம் இல்லையே என்று சிலருக்கு மன அழுத்தம் உருவாகலாம். தன்னை வேறு ஏதாவது வகைகளிலாவது மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.

மன சோர்வு
மன சோர்வு உருவாவதற்கு பெரும்பாலும், என்னால் இயலாது அல்லது என்னால் இயலவில்லை என்ற அவநம்பிக்கையே முக்கிய காரணமாக இருக்கிறது. சிலர் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தனக்கு அது இயலவில்லை, தனக்கு அந்த திறமை இல்லை, எனக்கு அது கிடைக்கவில்லை என்று தன்னையே தாழ்திக் கொண்டு மனச்சோர்வு அடைகிறார்கள்.

மன வேதனை
யாரோ ஒரு மனிதர் செய்த தவறுகளை நினைத்து, சிலர் தங்களது மனதை வேதனைக்கு ஆளாக்குகிறார்கள். தவறு செய்தவன் கூட நிம்மதியாக வாழும்போது, இவர்களோ நிம்மதி இல்லாமல் வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள்.

மனக் கவலை
மனக்கவலைகள் பெரும்பாலும் ஒருவர் இழந்த மனிதரையோ, பொருளையோ, வாய்ப்பையோ நினைத்து வருந்தும் போது உருவாகின்றன. இந்த உலகில் யாரும், எதுவும், யாருக்கும் நிரந்தரமில்லை என்ற அடிப்படை உண்மையைக் கூட புரிந்துக் கொள்ளாமல். என்னிடம் அது இல்லை அல்லது அது என்னை விட்டு தொலைந்துவிட்டது, என்று கவலையில் மூழ்குகிறார்கள்.

மனக் குழப்பங்கள்
இந்த சமுதாய அமைப்பு பெரும்பாலும் ஒரு மனிதன் சுயமாக வாழ்வதற்கு கற்றுக் கொடுப்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் யாரோ ஒருவரை எதிர்பார்த்தோ, சார்ந்தோ, வாழ பழக்கப்படுகிறார்கள். பெற்றோர்களோ, சகோதர சகோதரிகளோ, நண்பர்களோ, முதலாளிகளோ, கல்வியோ, செல்வமோ, வேலையோ, தொழிலோ, ஜாதியோ, மதமோ, எதையோ ஒன்றை சார்ந்தே மனிதர்கள் வாழ பழகிக் கொண்டார்கள்.

அவர்கள் சார்ந்திருந்த மனிதர்களோ, விசயங்களோ, அவர்களுக்கு தக்க நேரத்தில் உதவவில்லை என்றாலோ அல்லது தக்க நேரத்தில் தக்க உதவி கிடைக்காது என்ற எண்ணம் தோன்றினாலோ, அவர்களின் மனதில் சமமின்மையும், குழப்பமும் உருவாகின்றன.

மன சமமின்மைகளுக்கு காரணங்கள்
இன்றைய மனிதர்கள், அறிந்தோ, அறியாமலோ, பெரும்பாலும் அடுத்தவர்களை சார்ந்தே வாழ்ந்து கொண்டிருப்பதால், அவர்களுக்கு மன அழுத்தங்கள் மிக எளிதாக உருவாகின்றன.

பெற்றோர்கள் பிள்ளைகளையும், பிள்ளைகள் பெற்றோர்களையும் சார்ந்து வாழ்கிறார்கள். குடும்பத்தில் அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, என்று உறவோடு வாழ்வதற்குப் பதிலாக சிலர் அவர்களை சார்ந்து வாழ தொடங்கிவிட்டார்கள். சமுதாயத்தில், உறவினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள், என யாரையாவது சார்ந்து மனிதர்கள் வாழ்கிறார்கள்.

அவர்கள் சார்ந்திருக்கும் மனிதர்களிடமிருந்து அவர்களுக்கு, மதிப்பும், மரியாதையும், கிடைக்காத போது; அவர்கள் மனக் குழப்பங்களுக்கும், மன அழுத்தங்களுக்கும் ஆளாகிவிடுகிறார்கள்.

மனக் குழப்பங்களுக்கு தீர்வுகள்
மனதில் உருவாகும் அனைத்து வகையான மாற்றங்களுக்கும், வேதனைகளுக்கும், குழப்பங்களுக்கும், தீர்வாக இருக்க கூடியது; உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் மட்டுமே.

ஒரு மனிதர் ஏன் இவ்வாறு நடந்துக் கொள்கிறார்? ஏன் அவ்வாறு நடந்துக் கொள்ளவில்லை என்று குழம்பாமல். ஒரு நிகழ்வை ஏன் இவ்வாறு நடந்தது, ஏன் அவ்வாறு நடக்கவில்லை என்று மனதை குழப்பிக் கொள்ளாமல். அந்த மனிதரையும் நிகழ்வினையும் உள்ளது உள்ளபடியே ஏற்றுக் கொண்டால் மன வேதனைகளும், மன அழுத்தங்களும் நிச்சயமாக உருவாகாது.

உறவினர்களையும், நண்பர்களையும், உடன் பணி புரிவோர்களையும், அவர்களின் இயல்புடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு உருவாகிவிட்டால். அது கடுமையான மன வேதனைகளை நிச்சயமாக உருவாக்காது. பிற மனிதர்களை நம்முடனும், நம்மை பிற மனிதர்களுடனும் ஒப்பிட்டுப் பார்க்கும் செயலை கைவிட வேண்டும். இதுவும் மனவேதனைகளுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

ஒவ்வொரு மனிதர்களும், தனி தன்மையுடன் படைக்கப்பட்ட உயிர்கள் என்றும். இரு மனிதர்கள் ஒன்றைப் போல் இருக்கமாட்டார்கள் என்றும் புரிந்துக் கொண்டு. மற்றவர்கள் நம்மை புரிந்துக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்காமல்.

மனிதர்களையும் வாழ்க்கையையும் ஒப்பிடாமல், சார்ந்து வாழாமல், உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொண்டால்; மன அழுத்தமும், சோர்வும், கவலையும், வேதனையும், நிச்சயமாக நமக்கில்லை.

« PREV
NEXT »

No comments