ஆரோக்கியமாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்

மருத்துவமனைகளோ, கிளினிக்குகளோ இல்லாத ஊரே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இன்றைய பெரும்பாலான மக்கள் மருத்துவர்களை நம்பியே வாழ்கிறார்கள். மருத்துவர்களைப் பலர் கடவுள்களைப் போன்று எண்ணுகிறார்கள். உயர்ந்த இடத்தில் மக்கள் வைத்திருக்கும் அந்த மருத்துவர்கள் பொய்யுரைக்கலாமா?

பொய்யுரைப்பது மனித இயல்புகளில் ஒன்று. சிலர் அறியாமையினாலும், சிலர் தாங்கள் செய்வதை நியாயப் படுத்துவதற்காகவும், சிலர் மற்றவர்களை ஏமாற்றுவதற்காகவும், பொய் உரைப்பார்கள். இந்த உலகில் யார் நம்மிடம் பொய்யுரைத்தாலும் நம்மால் கண்டுபிடித்து விட முடியும். காரணம், நாம் பலவற்றை அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் மருத்துவர்கள் கூறும் பொய்களை மட்டும் நம்மால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை. இதற்குக் காரணம் நம் உடலைப்பற்றிய அறிவும் புரிதலும் நம்மிடமில்லை.

பலவற்றை அறித்துக்கொள்ள விரும்பும் மனிதர்களுக்கு சொந்த உடலை அறிந்துகொள்ளும் ஆர்வம் மட்டும் இருப்பதில்லை. இதற்குக் காரணம் உடலில் ஏதாவது தொந்தரவு உண்டானால் மருத்துவம் செய்துக் கொள்ளலாம் என்ற அலட்சியப் போக்கு. பலருக்கு ஒரு முக்கியமான விஷயம் புரிவதில்லை, பணம் கொடுத்தால் மருந்துகள் கிடைக்கும், மருத்துவம் கிடைக்கும் ஆனால் ஆரோக்கியம் கிடைக்காது. உடலின் ஆரோக்கியத்தை உடல் தான் கொடுக்க முடியுமே ஒழிய வேறு யாராலும் கொடுக்க முடியாது.

மனிதனின் ஆரோக்கியம் என்பது உடலின் உள்ளிருந்து உருவாகும் விசயமாகும், உடலின் வெளியிலிருந்து கிடைப்பவை அல்ல. நோய்கள் உண்டான பிறகு மருத்துவம் செய்வதை விடவும், நோய்களே அண்டாமல் வாழ்வதுதான் சிறப்பு என்பதை பலர் உணர்வதில்லை.

நமக்கு கம்ப்யூட்டர் தெரியும், ராக்கெட் தொழில்நுட்பம் தெரியும், கட்டடம் கட்டத் தெரியும், உலக அரசியல் தெரியும், உலக பொருளாதாரம் தெரியும், நிலாவில் என்ன இருக்கிறது என்று தெரியும், செவ்வாய்க் கிரகத்தில் என்ன இருக்கிறது என்று தெரியும். ஆனால் பிறந்ததிலிருந்தே நம் கூடவே இருக்கும் நம் உடலில் என்ன இருக்கிறது என்பது மட்டும் தெரிவதில்லை. நம் உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதும் தெரியாது. நம் உடல் நோய்வாய்ப்பட்டால் எவ்வாறு குணப்படுத்துவது என்பதும் தெரியாது.

ஒரு மனிதன் என்ன தொழில் செய்தாலும், அவர் யாராக இருந்தாலும், அவர் உயிர் வாழ அடிப்படைத் தேவை இந்த உடல் தான். ஆரோக்கியமான உடல் இல்லாவிட்டால் யாராலும் எதையுமே செய்ய முடியாது. அவ்வளவு ஏன் உயிர் வாழ அடிப்படைத் தேவையே உடல்தானே. அந்த உடலைப் பற்றி மட்டும் நமக்கு ஒன்றுமே தெரிவதில்லை. இந்த அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு பலர் நம்மை ஏமாற்றி பணம் பண்ணுகிறார்கள்.

மாதவிடாய் என்பது பெண்கள் அனைவரும் மாதம் தோறும் நடந்து வரும் நிகழ்வு. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு அதன் தொடர்பாக ஒன்றுமே தெரிவதில்லை. கர்ப்பம் தரிப்பதும் குழந்தை பெறுவதும் பெண்களால் மட்டுமே செய்யக்கூடிய காரியம். ஆனால் இதைப் பற்றியும் பெரும்பாலான பெண்களுக்குத் தெரிவதில்லை. மாதவிடாய், கர்ப்பம் தரித்தல், குழந்தைகளை ஈன்றெடுத்தல் மற்றும் குழந்தை வளர்ப்பு இவை ஒவ்வொரு பெண்ணும் அறிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் அல்லவா?பெரும்பாலான பெண்களுக்கு இவை தெரிவதில்லை, தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லை. மருத்துவர் இருக்கிறார் அல்லது மருத்துவம் செய்துகொள்ளலாம் என்ற அலட்சியம் அவர்களிடம் இருக்கிறது.

ஒரு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி அவரின் 14 வயது பேத்திக்கு மாதவிடாய் சீராக இல்லை என்பதால் ஹார்மோன் ஊசிகள் போடுவதாக என்னிடம் தெரிவித்தார். மாதவிடாய் என்பது என்ன?குழந்தை பெறுவதற்காக உடல் கருமுட்டைகளை உற்பத்தி செய்கிறது. பயன்படுத்தாத கருமுட்டைகள் மாதம் தோறும் மாதவிடாயாக உடலை விட்டு வெளியேறுகிறது. சரி, 14 வயது சிறுமிக்கு ஏன் கருமுட்டை சீராக உற்பத்தி செய்ய வேண்டும்? அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? அவள் குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறாளா? இல்லை அல்லவா?

குழந்தைப் பெற்றுக்கொள்ளும் தேவையில்லாத சிறுமிக்கு மாதவிடாய் தாமதமானால் என்ன? சீராக வராவிட்டால் என்ன? ஹார்மோன் ஊசிகளைச் செலுத்தி உடலைக் கட்டாயப்படுத்தி மாதவிடாய் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் என்ன? இது ஏன் அந்த பாட்டிக்குத் தெரியவில்லை. பருவம் அடைந்த சிறுமிகளுக்கு மாதவிடாய் சீராக சில ஆண்டுகள் ஆகலாம். இது ஏன் பல பெண்களுக்குத் தெரியவில்லை. பள்ளி பாடங்களின் அழுத்தத்தினால் சில சிறுமிகளுக்கு மாதவிடாய் தாமதமாகலாம், அல்லது சீரில்லாமல் இருக்கலாம். தானாக சீராகட்டுமே என்ன அவசரம்? இரசாயனங்களைக் கொடுத்து சிறுமிகளை ஏன் நோயாளிகளாக மாற்றுகிறீர்கள்?.

கர்ப்பப்பை கட்டிகள், மார்பக புற்றுநோய், உடல் தளர்ச்சி, உடல் பருமன், முகத்தில் மீசை தாடி முளைப்பது இப்படி பல பக்கவிளைவுகளை உண்டாக்கக் கூடியவை ஹார்மோன் ஊசிகள். அந்த சிறுமிக்கு தெரியாவிட்டால் ஒன்றும் தவறில்லை. ஆனால் 50 வயதுக்கு மேலான பெண்மணிக்கு ஏன் பெண்ணின் உடலைப் பற்றிய அறிவில்லை. தன்னுடலை அறிந்துக் கொள்வதை விட வேறு என்ன முக்கிய வேலை இருக்கப் போகிறது அந்த பெண்மணிக்கு. இதுதான் இன்றைய பெரும்பாலான பெண்களின் நிலையும் கூட.

நோய்கள் என்றால் என்ன? நோய்கள் எவ்வாறு உருவாகுகின்றன? நோய்கள் உண்டாகாமல் வாழ்வது எப்படி? ஒருவேளை நோய்கள் உண்டானால் அவற்றை எவ்வாறு களைவது? இப்படி எந்த அடிப்படை விசயங்களையும் இன்றைய மக்கள் அறிந்துகொள்ள விரும்புவதில்லை. ஆரோக்கியமாக வாழத் தேவையான இந்த அடிப்படை விசயங்களைக் கூட அறிந்துக் கொள்ளாமல் என்ன வாழ்க்கை வாழ்கிறீர்கள்? பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில், ஆவலில் மக்கள் எல்லாவற்றையும் மறந்து திரிகிறார்கள். ஆனால், எத்தனை கோடிகள் கொடுத்தாலும் ஆரோக்கியம் திரும்பாது என்பதை யாரும் உணர்வதில்லை.

உங்கள் உடலையும் அந்த உடலின் தன்மைகளையும் முதலில் கற்றுக்கொள்ளுங்கள். உடலை அறிந்துக் கொள்ளாமல் வேறு எதை நீங்கள் கற்று வைத்திருந்தாலும் வீண்தான். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.


To Top