கேள்வி பதில்
கேள்வி பதில்

மனம் என்பது என்ன?

உணர்தல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல், கேட்டல், எனும் ஐந்து அறிவுகளுக்கு அடுத்ததாக, மனம் என்பது மனிதனின் ஆறாவது அறிவாகும். முதல் ஐந்து அறிவுகளும், மற்ற உயிரினங்களுக்கு ஒன்று முதல் ஐந்து வரையில், சில விகிதாச்சாரங்களில் வழங்கப் பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொரு உயிரினத்திற்கும் மாறுபடும்.

மனிதர்களுக்கு மட்டுமே ஆறாவது அறிவான மனம் வழங்கப்பட்டிருக்கிறது. சில விலங்குகளுக்கும் சிறு மனம் இருந்தாலும் விலங்குகளின் மனம் மனிதர்களின் மனதைப் போன்று முழு ஆற்றலுடன் செயல்படுவது கிடையாது. அதே நேரத்தில் மனிதர்களின் மனதைப் போன்று அனைத்து விசயங்களையும் பதிவு செய்வதும் கிடையாது. மனிதர்களுக்கு மட்டுமே மனம் முழுமையாக செயல்படுகிறது.

குழந்தைகள் இந்த மண்ணில் பிறக்கும்போது அவர்களுக்கு மனம் இருப்பதில்லை. மனம் உருவாவதற்கு முன்பாகவே குழந்தைகளுக்கு புத்தி இருக்கும். புத்தி என்பதும் மனம் தொடர்பான விஷயம் அல்ல. அதாவது யார் தாய் என்ற அறிவு, பால் குடிக்கும் அறிவு, மூச்சுவிட, மலம் கழிக்க, தன் உறுப்புகளை பயன்படுத்த, போன்ற அடிப்படை அறிவுகள் குழந்தைகள் பிறக்கும்போதே உடன் பிறந்துவிடும்.

மனம் என்பது உடலில் ஒரு உறுப்பல்ல, மாறாக மனம் என்பது ஒரு உணர்வு. மனமானது உயிரைப் போன்று சூட்சம நிலைகளில் செயல்படுகிறது. மனதை உணர முடியுமே ஒழிய வெளிப்படையாக யாராலும் பார்க்கவோ, தொடவோ, அதனுடன் தொடர்பு கொள்ளவோ முடியாது.

"மனம் என்பது மூளையில் இருக்கிறதா?" என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆங்கிலத்தில் மனதை மைண்ட் (mind) என்று அழைப்பார்கள், மூளையையும் மைண்ட் (mind) என்றுதான் அழைப்பார்கள். இதற்குக் காரணம் இவை இரண்டுக்குமே சிந்திக்கும் ஆற்றல் உள்ளது. மனம் என்பது மூளையில் இல்லை ஆனால் மனம் என்னும் எண்ணங்களையும், மனம் இடும் கட்டளைகளையும், நிறைவேற்றும் வேலையை மூளை செய்வதனால் மூளையையும் மைண்ட் என்றே அழைக்கிறார்கள்.

இருதயத்தை மனம் என்று சிலர் அழைப்பார்கள். அதற்குக் காரணம் இருதயம் மனதின் தொடர்புகளை இணைக்கும் ஒரு பாலமாக செயல்படுகிறது. மனதில் உருவாகும் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு இருதயத்தில் தெரிகிறது. இருதயத்தின் துடிப்பு மாறுவது, இருதயம் படபடப்பது, இருதயம் கனப்பது, இருதயம் வெறுமையாக உணர்வது, போன்ற உணர்வுகள் மனதினில் உருவாகும் மாற்றங்களை பிரதிபலிக்கிறது.

மனதில் ஒரு எண்ணமோ கட்டளையோ தோன்றும்போது, அது நேரடியாக செயல்படாமல் மூளையிடம் கட்டளைகளை அறிவிக்கிறது. மூளை தான் அந்தக் கட்டளைகளை நிறைவேற்றுகிறது. மனம் எங்கு இருக்கிறது என்று கேட்டால், மனம் மனிதனின் உடலை சுற்றிலும் ஒரு போர்வையைப் போன்று அமைந்திருக்கிறது. மனிதனுக்கு சிந்தனைகள் தோன்றும் போது மனமானது, உடலிலிருந்து பரவி சிந்தனை செய்யப்படும் நபரை, இடத்தை, பொருளை அல்லது சிந்தனை தொடர்பானவற்றை சென்றடையும்.


« PREV
NEXT »

No comments