கேட்டதை கொடுக்கும் மனதின் சக்தி

கேட்டதை கொடுக்கும் மனதின் சக்தி 
நமது பாரம்பரியத்தில் மனதுக்கு மிகவும் முக்கியமான இடத்தை கொடுத்திருக்கிறார்கள். அனைத்து சுபகாரியங்களையும் மனதையே பிரதானமாக கொண்டே நடத்தினார்கள். ஒரு ஆணையும் பெண்ணையும் தாம்பத்திய பந்தத்தில் இணைக்கும் நிகழ்வுக்குக் கூட, திரு “மனம்” என்றுதான் பெயர் வைத்தார்கள். இன்றும் நாம் துன்பத்தில், துயரத்தில், கவலையில் இருப்பவர்களை சந்திக்கும் போது கூறும் வார்த்தை “மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள்”. “மனதை தளரவிடாதீர்கள்” என்பதாகத்தான் இருக்கிறது.

நோயாளிகளை சந்திக்கும் போது கூட உடலை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஆறுதல்கள் கூறும் போது. மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள் என்றும் சேர்த்துதான் ஆறுதல் கூறுகிறோம். அந்த அளவுக்கு மனதின் திறனும் முக்கியத்துவமும் நம்மவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

மனம் மட்டும் நம்பிக்கை கொண்டால் அனைத்தும் நலமாகும் 
ஒருவருக்கு என்ன நோய் இருந்தாலும், அது எவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும், அவரின் மனம் மட்டும் என் நோய்கள் நிச்சயமாக குணமாகும் என்ற தைரியத்துடன் இருந்தால். நிச்சயமாக அனைத்து நோய்களும் குணமாகும். ஒருவர் எந்த வகையான துன்பத்தில், துயரத்தில், சிக்கி இருந்தாலும் இந்த நிலை நிச்சயமாக மாறும், என் வாழ்க்கை சீர் பெறும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். அவரின் வாழ்க்கை நிச்சயமாக மாறும்.

ஆனால் மனதை நம்ப வைப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை
நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன், நான் தைரியமாக இருக்கிறேன், எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறும் பலரும் உண்மையில் மனதளவில் பலவீனமாகவே இருக்கிறார்கள். அவர்கள் கூறும் நம்பிக்கை, தைரியம் அனைத்தும் புத்தியின் அளவில் மட்டுமே பதிந்திருக்கிறது. அவர்களின் மனமோ அதனை நம்ப மறுக்கிறது, மனதுடன் மனிதர்களுக்கு தொடர்பு இல்லாததால் மனதின் பதிவுகளைப் பற்றி மனிதர்களுக்கு புரிவதில்லை.

இவர்களின் சிந்தனையிலும், புத்தியிலும், இருக்கும் விஷயங்களை வைத்து, மனதிலும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷயத்தை ஒரு தடவை கூறும்போது அல்லது ஒரு தடவை படிக்கும் போது அதனை மனம் நம்பாது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பலமுறை சிந்திக்கும் போதும், வாசிக்கும் போதும் மட்டுமே மனம் அதனை நம்பத் தொடங்கும்.

மனதை நம்ப வைக்கும் வழிமுறைகள்
மனம் ஒரு விஷயத்தை நம்ப வேண்டுமென்றால், அந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும். அந்த விஷயத்தை கற்பனையில் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த விஷயம் உங்களுக்கு கிடைத்துவிட்டது போலவும், அதை நீங்கள் அடைந்து விட்டது போலவும் ஒரு உணர்வு உங்களுக்குள் தோன்ற வேண்டும்.

ஒரு உதாரணம் சொல்கிறேன், நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களின் நடை, உடை, பாவனை, ஸ்டைல், அனைத்துமே நடிகர் ரஜினிகாந்தைப் போலவே அமைந்திருக்கும். காரணம் அவர்கள் ரஜினிகாந்தின் படங்களை திரும்பத் திரும்ப பார்த்தார்கள், அவரைப் பற்றியே சிந்தித்தார்கள், அந்த படத்தில் வரும் கதாபாத்திரங்களாகவே மாறுகிறார்கள். மனம் இவ்வாறுதான் செயல்படுகிறது.

எவரொருவர் ஒரு விசயத்தை மீண்டும் மீண்டும் நினைக்கிறாரோ, மீண்டும் மீண்டும் சிந்திக்கிறாரோ, மீண்டும் மீண்டும் படிக்கிறாரோ. அவர் அந்த விசயமாகவே மாறுகிறார். அந்த விசயத்துக்கும் அவருக்கும் சூட்சம நிலையில் ஒரு உறவும் பந்தமும் உருவாகிறது. அந்தப் விசயம் இருக்கும் இடத்தை நோக்கி இவர் பயணிக்கிறார் அல்லது ஏதாவது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி அந்த விசயம் இவரை வந்தடையும்.

ஆசைப்பட்டவற்றை அடையும் வழிமுறைகள்
உங்கள் வாழ்க்கையில் எதை அடைய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும். அது பணமோ, செல்வமோ, பொருளோ, பெயரோ, புகழோ, ஞானமோ, மனிதர்களோ, அது எதுவாக இருந்தாலும் அதை அடைய.

1. அது ஏன் உங்களுக்கு வேண்டும்? எதற்காக அதன் மீது ஆசைப்படுகிறீர்கள்? என்ற தெளிவான புரிதல் உங்களுக்கு இருக்க வேண்டும்.

2. நீங்கள் ஆசைப்பட்டது கிடைத்தால், என்ன செய்வீர்கள்? அதனால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள்? என்பது புரிய வேண்டும்.

3. அதை அடைவதற்கான வழியை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

4. அதன் தொடர்பாக தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

5. அதன் தொடர்பான புத்தகங்கள், இணைய பக்கங்களை, வாசிக்க வேண்டும்.

6. அதற்கு தொடர்புடைய மனிதர்களை சந்திக்க வேண்டும். அவர்களுடன் கலந்துரையாட வேண்டும்.

7. மனதளவில் கற்பனையில், அதை நீங்கள் அடைந்து விட்டது போலவும், அதை பயன்படுத்துவது போலவும், ஒரு உணர்வு ஏற்பட வேண்டும்.

8. இறுதியாக அது உங்களுக்கு கிடைத்து விட்டது போலவும். அதை பயன்படுத்துவது போலவும், அதை அனுபவிப்பது போலவும், அடிக்கடி நினைத்துப் பார்க்க வேண்டும்.

அனைவரும் கூறுவது போல் நான் கற்பனை செய்து பாருங்கள் என்று சொல்லவில்லை. அது உண்மையில் அடைந்த பிறகு ஏற்படும் உணர்வு, இப்போதே ஏற்பட வேண்டும். அதுதான் நான் கூறுவது.

இறுதியாக ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஒருவர் ஆசைப்படுவதால் மட்டும் ஒரு விசயம் அவருக்கு கிடைத்து விடாது. அதற்குரிய காலமும், நேரமும், பயிற்சியும், முயற்சியும், உழைப்பும், சேர்ந்தால் மட்டுமே ஒருவருடைய ஆசை நிறைவேற்றப்படும்.


To Top