ஆன்மாவும், ஆழ்மனமும், பிரபஞ்சமும், தெய்வங்களும், கண்ணுக்குத் தெரியாத மற்ற சக்திகளும், எப்போதுமே நமக்கு வழிகாட்டிக் கொண்டே இருக்கின்றன. மனிதர்கள் தங்களின் வாழ்க்கையை சிறந்த முறையில் வாழ அனைத்து திசைகளிலிருந்து அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வந்துகொண்டே இருக்கும்.

வாழ்க்கையை தெளிவில்லாமலும் அவசரத்திலும் வாழும் போது இந்த வழிகாட்டுதல்கள் பெரும்பாலும் நமக்குப் புரிவதில்லை. மனிதர்களுக்கு வழங்கப்படும் செய்திகளும் வழிகாட்டுதல்களும் எவ்வாறு இருக்கும்?. மனிதர்களுக்கு வழங்கப்படும் வழிகாட்டுதல்கள் பெரும்பாலும் உணர்வுகளாகவும், எண்ணங்களாகவும், காட்சிகளாகவும், உருவங்களாகவும், சின்னங்களாகவும், இருக்கும்.

உதாரணத்திற்கு ஒருவருக்கு ஒரு விசயத்தை செய்யலாமா வேண்டாமா என்று ஒரு குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவருக்கான விடையானது இந்த விசயத்தை செய் அல்லது செய்யாதே என்றோ, அந்த விசயத்தை ஏன் செய்ய வேண்டும் அல்லது ஏன் செய்யக்கூடாது என்றோ பதில் வழங்கப்படாது. மாறாக அவருடைய உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சியான, ஆனந்தமான அல்லது அமைதியான உணர்வு தோன்றும். இது அவருக்கு இந்த விசயத்தை செய்யலாம் என்று கொடுக்கப்படும் அனுமதியாகும். அல்லது சிலருக்கு அச்ச உணர்வோ, ஆபத்தான சூழ்நிலையில் இருப்பது போன்ற ஒரு உணர்வோ, அல்லது கவலை உருவாகும். இது அவருக்கு அந்த செயலை செய்யக்கூடாது என்று வழங்கப்படும் பதிலாகும்.

ஒரு கேள்விக்கான விடை வெளியிலிருந்து வரும் பொழுது எப்படி இருக்கும்?. ஒரு விசயத்தை செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டால் இறைவனிடமும் இயற்கையிடமும் நாம் தீர்வை நாடும் போது, சற்று நேரத்தில் பத்திரிக்கையிலிருந்தோ, புத்தகத்திலிருந்தோ, வெளியிலிருந்தோ, ஏதோ ஒரு சொல் அல்லது ஒரு காட்சி நம்மை கவர்ந்து இழுக்கும். அந்தக் காட்சியில் அந்த இடத்தில் இருக்கும் எழுத்து, சொல், சித்திரம், உருவம், அறிகுறி, போன்றவற்றை வைத்து நமக்கு என்ன பதில் வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

உதாரணத்திற்கு என் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை குறிப்பிடுகிறேன். ஒரு நாள் காரில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது; மனிதர்கள் உறங்கும் போது என்ன நடக்கிறது? ஆன்மா என்ன செய்கிறது? மனம் என்ன செய்கிறது? என்பன போன்ற குழப்பங்களும் சிந்தனைகளும் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. அப்போது என் உள்ளுணர்வு ரேடியோவை சிங்கப்பூர் சேனலுக்கு மாற்ற வேண்டும் என்று தோன்றியது. சிங்கப்பூர் வானொலியான 96.8க்கு நான் மாற்றிய பொழுது அதில் டாக்டர் காதர் இப்ராஹிம் அவர்கள் தூங்கும் போது என்ன நடக்கிறது என்பதை விளக்கி கூறிக் கொண்டிருந்தார்.

இன்னொரு தடவை ஒரு இடத்துக்கு செல்லலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டு கொண்டிருக்கும் போது தெருவில் “Just Do It” என்ற ஒரு வாசகம் என் கண்ணில் தென்பட்டது. இதுதான் எனக்கு கிடைத்த பதில். பெரும்பாலான வேளைகளில் எனக்கு குழப்பங்களோ, சந்தேகங்களோ, தோன்றினால் இந்த பிரபஞ்சத்திலிருந்து எனக்கு வழிகாட்டுதல்களும் காட்சிகளும் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த பிரபஞ்சம் வழிகாட்டிக் கொண்டே இருக்கும். அவர்கள்தான் அந்த வழிகாட்டுதல்களை புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

தொடக்கத்தில் நம்முடைய மனமானது தன்னுடைய ஆசைகளை முதலில் காட்டும். அந்த மனதின் அறிவிப்புகளையும் பிரபஞ்சத்தின் அறிவிப்புகளையும் பிரித்துப் பார்க்க பழகிக் கொள்ள வேண்டும். பிரபஞ்சம் நமக்கு வழிகாட்டுகிறது என்ற புரிதல் வந்த உடனேயே படிப்படியாக மனதின் எண்ணங்களையும் பிரபஞ்சத்தின் அறிவிப்புகளையும் பிரித்துப் பார்க்கக்கூடிய தன்மை நமக்குள் உருவாகிவிடும். பிரபஞ்சத்தின் அல்லது இறைவனின் வழிகாட்டுதலைப் பின்பற்றினால், வாழ்க்கையில் எல்லா வகையான இன்பமும், வெற்றியும், மகிழ்ச்சியும், நிம்மதியும், தானாக நம்மை வந்தடையும்.