புதியவை
latest

பிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்

பிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம். அனைத்து தொந்தரவுகளையும் துன்பங்களையும் நோய்களையும் நீக்கிக் கொள்ளலாம்.

பிரார்த்தனை என்பது பெரும்பாலும் கடவுளிடம் நம் குறைகளை கூறும் செயலாகவே இருக்கிறது. என்னிடம் அது இல்லை, இது இல்லை என்று புலம்புவதாகவே பலரின் பிரார்த்தனைகள் இருக்கிறது. நம்மிடம் இருக்கும் குறைகளை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்கும் போது அதையே நினைத்துக் கொண்டிருக்கும் போது, நமது குறைகள் மேலும் பெரிதாகுமே ஒழிய அவை குறைவதில்லை.

நம் முன்னோர்கள் “எண்ணப்படிதான் வாழ்க்கை” என்று கூறிச் சென்றது உங்களுக்கு தெரிந்திருக்கும். துன்பங்களையும், துயரங்களையும், நோய்களையும், கவலைகளையும், மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருப்பதால். நாம் அந்த தீய சக்திகளுக்கு மேலும் பலத்தையும் வீரியத்தையும் அளிக்கிறோம்.

உதாரணத்திற்கு ஒருவருக்கு பணக் கஷ்டம் இருக்கிறது எனும் போது. அவர் மனதினுள் எனக்கு பண கஷ்டம் இருக்கிறது, எனக்கு பணம் கிடைக்கவில்லை, என்னிடம் பணம் இல்லை, எனக்கு பணம் போதவில்லை, என்பதைப் போன்ற தீய எண்ணங்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டிருப்பதால். அந்த எண்ணம் அவரின் கஷ்டங்களை மேலும் பெரிதாக்குகிறது.

அதைப்போல் ஒருவருக்கு ஒரு நோய் உண்டானால். எனக்கு அந்த நோய் இருக்கிறது. இதனால் வேறு நோய்கள் உருவாகக் கூடும். நோய் முற்றினால் மோசமான விளைவுகள் உருவாகும் என்பதைப் போன்ற சிந்தனைகள் அந்த நோயாளியின் நோயை மேலும் மோசமாக்கி, அவர் பயந்த அனைத்தையும் அவரின் உடலில் உருவாக்கக் கூடும்.

காரணம் மனம் இவ்வாறுதான் செயல்படுகிறது. மனதுக்கு சுயமாக சிந்திக்கும் ஆற்றல் கிடையாது. மனதுக்கு நல்லது கெட்டதை பகிர்ந்து அறியும் ஆற்றலும் கிடையாது. நீங்கள் என்ன கட்டளையிடுகிறீர்களோ அதை மனம் நிறைவேற்றும் அவ்வளவுதான். நமது எண்ணங்களும் சிந்தனைகளுமே மனதுக்கு நான் இடும் கட்டளைகளாகும்.

ஒரு மனிதனுக்கு அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் தீர்வை கொடுப்பது அவனுடைய மனம். அந்த மனம் நிம்மதியாகவும், தைரியமாகவும், மகிழ்ச்சியாகவும், இருந்தால் மட்டுமே அவன் இந்த வாழ்க்கையில் அனைத்து வகையான சோதனைகளிலிருந்தும் விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். மனம் தான் மனிதன்.

மனிதனின் மனதை அமைதிப் படுத்துவதற்காகவும் சமப்படுத்துவதற்காகவும் மட்டுமே அனைத்து மதங்களும் வழிபாட்டு முறைகளை உருவாகின. ஆனால் வழிபாட்டு செய்யும் வேளைகளில் மனதின் சக்தியை தவறாக உபயோகப்படுத்தும் போது அதுவே அவனுக்கு மேலும் பல புதிய சிக்கல்களை உருவாக்கிவிடுகிறது. மனதின் ஆற்றலை நாம் புரிந்துக் கொள்ளாததால் மனதை தவறான வழியில் பயன்படுத்துகிறோம்.

பிரார்த்தனைகள் செய்யும் வழிமுறைகள்
“மன திருப்தி” என்ற ஒரு சொற்றொடரை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அது என்ன மன திருப்தி? திருப்தி என்று மட்டும் சொன்னால் போதாதா?.

ஒரு துன்பம் உருவானால் “மனம் சரியில்லை” என்கிறோம். நோய் உண்டானால் “மனதை தளர விடாதீர்கள்” என்கிறோம். காதல் உருவானால் “மனதை தொலைத்துவிட்டேன்” என்கிறோம். நல்ல நிகழ்வுகள் நடக்கும்போது “மன நிறைவாக” இருக்கிறது என்கிறோம். மனிதனின் வாழ்க்கையில் அனைத்துமே மனதை மையமாக கொண்டு நடப்பது புரிகிறதா?. நாம் செய்யும் அனைத்து காரியங்களும் மனதை திருப்திப்படுத்தவே என்பது புரிகிறதா?.

மனதை திருப்திப்படுத்தவே பிரார்த்தனை. எதை நினைத்தால் மனம் அமைதி அடையுமோ, அதை நினைப்பதே பிரார்த்தனை. எதை நினைத்து மன நிறைவும், மன அமைதியும் கொள்கிறீர்களோ, அது உங்களை தேடி வரும். உங்களை திருப்திபடுத்துவது மனதின் வேலை, மனதை திருப்திபடுத்துவது உங்களின் வேலை.

ஒருவருக்கு வேண்டிய பொருளை அடைய பிரார்த்தனை செய்யும் போதோ அல்லது துன்பங்கள், துயரங்கள், நோய்கள், போன்றவற்றில் இருந்து விடுதலைப் பெற பிரார்த்தனைகள் செய்யும்போதோ. அவர் எந்த மதத்தைச் சார்ந்து இருக்கிறாரோ அந்த மதத்தின் கடவுள் பெயரை பயன்படுத்தலாம். குலதெய்வம், காவல் தெய்வம், இஷ்ட தெய்வம், குருமார்கள் மகான்கள் போன்றவர்களின் பெயர்களையும் முன்னிறுத்தலாம். பிரார்த்தனை என்பது அதைக் கொடு, இதைக் கொடு, என்று யாசகம் கேட்பதாகவும், என்னிடம் அது இல்லை, இது இல்லை, என்ற புலம்பலாகவும் இருக்கக்கூடாது.

பிரார்த்தனை என்பது நமக்கு என்ன தேவை? அது ஏன் தேவை? அது நமக்கு எவ்வளவு முக்கியம்? அது கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என்று இறைவனுக்கு அறிவிக்கும் ஒரு செயலாக இருக்கவேண்டும். அதை அடைந்ததால் ஏற்படும் திருப்தியும் மகிழ்ச்சியும் உங்கள் பிரார்த்தனையில் இருக்க வேண்டும். பிரார்த்தனை எப்போதுமே தெளிவாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். இறைவா எனக்கு ஒரு வீடு வேண்டும் என்று மொட்டையாக கேட்க கூடாது.

உதாரணத்துக்கு, உங்களுக்கு ஒரு பெரிய வீடு வேண்டுமா? உங்கள் பிரார்த்தனையில் அந்த வீடு இருக்க வேண்டும். அந்த வீட்டின் வடிவம், அமைப்பு இருக்க வேண்டும். அந்த வீட்டில் யார் யாரெல்லாம் இருப்பார்கள்? அந்த வீட்டில் எப்படியெல்லாம் வாழ்வீர்கள்? என்னவெல்லாம் செய்வீர்கள்? என்பன போன்ற விசயங்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு முறை பிரார்த்தனை செய்த பின்பும் அந்த வீடு உங்களுக்கு கிடைத்துவிட்ட திருப்தி இருக்க வேண்டும். அந்த வீட்டை உங்களுக்கு கொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

எடுத்துக் காட்டுக்கு:
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிரபஞ்ச பேரறிவே, பிரபஞ்ச பேராற்றலே இறைவா. நீ கொடுத்த இந்த அற்புதமான வீட்டுக்கு நன்றி. நான்கு அறைகள் கொண்ட அந்த வீட்டில் நான், என் தாய், தந்தை, மனைவி, மற்றும் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். இந்த வீடு மிகவும் வசதியாகவும் அழகாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. இந்த வீடு முழுவதும் இறைவனின் அன்பும் கருணையும் நிறைந்திருக்கிறது. இறைவனுக்கு நன்றி. பிரபஞ்ச பேரறிவுக்கு நன்றி. என் ஆழ்மனத்துக்கு நன்றி.

இந்த பிரார்த்தனையை தினமும் இரவு வேளைகளில் உறங்குவதற்கு முன்பாக செய்ய வேண்டும். விரைவில் உங்கள் பிரார்த்தனைகளை அடைவதற்காக வழிகள் உங்களுக்கு காட்டப்படும். சிலருக்கு ஒரே நாளில் பதில் கிடைக்கலாம். சிலருக்கு சில வாரங்கள் ஆகலாம், சிலருக்கு சில மாதங்கள் கூட ஆகலாம். பிரார்த்தனையில் பலன் என்பது உங்களின் நம்பிக்கையின் வலிமையைப் பொறுத்தே அமையும்.

நோய்களில் இருந்து விடுதலை வேண்டுமா? உங்கள் பிரார்த்தனை
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிரபஞ்ச பேரறிவே, பிரபஞ்ச பேராற்றலே இறைவா. நீ கொடுத்த இந்த அற்புதமான வாழ்க்கைக்கு நன்றி. என் நோய்கள் நீங்கி ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ்கிறேன். என் பாவங்களை மன்னித்து என் ஆரோக்கியத்தை திருப்பி தந்ததற்கு நன்றி. உடல் ஆரோக்கியத்துக்கு நன்றி. மன நிம்மதிக்கு நன்றி. என் மன அமைதியும் ஆரோக்கியமும் இறைவனின் அருளும் என்றும் நிலைத்திருக்கட்டும். இறைவனுக்கு நன்றி. பிரபஞ்ச பேரறிவுக்கு நன்றி. என் ஆழ்மனத்துக்கு நன்றி.

நீங்கள் பிரார்த்தனைகள் செய்ய தொடங்கியதும் உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கட்டளைகளையும் கவனிக்க வேண்டும். அந்த எண்ணங்களும் கட்டளைகளும் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற தேவையான வழிமுறைகளை காட்டும். வெறுமனே பிரார்த்தனை மட்டும் செய்வதால் எந்த பலனுமில்லை. உங்களுக்குள் தோன்றும் எண்ணங்களையும் கட்டளைகளையும் பின்பற்றினால் மட்டுமே நீங்கள் கேட்டது கிடைக்கும்.

என் நோய்கள் குணமாகும். என் பிரச்சனைகள் தீரும். என் துன்பங்கள் குறையும் என்று மீண்டும் மீண்டும் உங்களுக்குள்ளேயே சொல்லிக் கொள்ள தேவையில்லை. இவ்வாறு மீண்டும் மீண்டும் உச்சரிப்பவர்கள் மனதில் நம்பிக்கையில்லை, சந்தேகப்படுகிறார்கள் என்று அர்த்தம். உதாரணத்துக்கு ஒருவரிடம் ஒரு வேலையை ஒப்படைக்கும் போது அவரின் திறமையின் மீது நம்பிக்கை இருந்தால் ஒரு முறை கூறிவிட்டு அமைதியாக இருந்துவிடுவோம். ஆனால் அவர் மீது சந்தேகம் இருந்தாலோ மீண்டும் மீண்டும் அவருக்கு நினைவுப் படுத்திக் கொண்டே இருப்போம் அல்லவா? அதை போலத்தான்.

நீங்கள் பிரார்த்தனை வைப்பது இறைவனிடம், பிரபஞ்ச பேரறிவிடம். அந்த பேரறிவுக்கு மிஞ்சிய அறிவோ, திறமையோ, கருணையோ இந்த உலகில் கிடையாது. மனிதர்கள் நம்பும் சக்திகளும், தெய்வங்களும், மகான்களும் இந்த பிரபஞ்ச பேரறிவுக்குக் கீழே தான் உள்ளன. இதை மனதில் கொண்டு மனதார நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்யுங்கள். அந்த பிரார்த்தனை நிச்சயமாகப் பலனளிக்கும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள். நீங்கள் நினைத்தது நிச்சயமாக நடக்கும் கிடைக்கும்.

« PREV
NEXT »

No comments