கேள்வி பதில்
கேள்வி பதில்

சித்த மருத்துவம் சில ஆலோசனைகள்

சித்த மருத்துவம் என்பது நமது சித்தர்களால் கண்டறியப்பட்ட நமது பாரம்பரிய மருத்துவமாகும். சித்த மருத்துவமானது பத்தியங்கள், மூலிகைகள், வேர்கள், பட்டைகள், பழங்கள், காய்கள், இலைகள், காய்கறிகள், கீரைகள், பாஷாணங்கள் மற்றும் பல இயற்கையான பொருட்களை கொண்டு நோய்களை குணப்படுத்தும் வழி முறையாகும்.

சித்த மருத்துவத்தில் அனைத்து மூலப் பொருட்களும் இயற்கையான பொருட்களிலிருந்து உருவாக்கப்படுவதால், சித்த மருத்துவம் அனைவருக்கும் உகந்ததாகவும் பயனுள்ளதாகவும் இருத்தல் வேண்டும். எந்த ஒரு பக்கவிளைவுகளையும் உருவாக்க கூடாது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் சிலர் சித்த மருத்துவத்தை குறை கூறுவதை பரவலாக காண முடிகிறது.

நானே ஆங்கில மருத்துவர்களையும் ஆங்கில மருத்துவத்தின் நோயறிதல் முறைகளையும் (lab test) பரிந்துரைக்கும் சித்த மருத்துவர்களை பார்த்திருக்கிறேன். நோயாளிகளின் நாடியையும் உடலால் வெளிப்படுத்தப்படும் அறிகுறிகளையும் கண்டு நோயை அறியக் கூடிய சித்த மருத்துவர்கள் மிக குறைவாகவே உள்ளனர்.

சித்த மருத்துகள் சித்தர்கள் கூறிய பலன்களை அளிக்க வேண்டுமானால். சித்த மருத்துவத்தை ஆராய்பவர்களும், சித்த மருத்துவர்களும், சித்த மருந்துகளை தயாரித்து விற்பனை செய்பவர்களும், சித்த மருந்துகளை பயன்படுத்துபவர்களுக்கு சில முக்கியமான விசயங்களை கவனிக்க வேண்டும்.

சித்தர் பாடல்களையும், சித்த மருத்துவ முறைகளையும் ஆராயும்போது நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயங்கள் என்னவென்றால். அந்த குறிப்பிட்ட சித்த மருத்துவ மருந்தை எவ்வாறு தயாரிக்க வேண்டும்?. அந்த சித்த மருத்துவ மருந்தை எப்போது? எவ்வாறு? எந்த கால கட்டத்தில்? பயன்படுத்த வேண்டும்?. அந்த மருந்து யார் யாருக்கு பொருந்தும்?. யார் யாருக்கு பொருந்தாது என்பதை கவனிக்க வேண்டும்.

அந்த மருந்தை உட்கொள்ளும் போது, என்ன பத்தியங்கள் இருக்க வேண்டும் என்பதை கவனிக்க வேண்டும். மருந்தை சாப்பிட போகும் நபருக்கு அந்த மருந்து பொருந்துமா என்பதை கவனிக்க வேண்டும். அந்த மருந்தும் கலக்கப்படும் மற்ற பொருட்களின் தன்மைகளையும், அளவையும், தரத்தையும் கவனிக்க வேண்டும்.

மூலிகைகளையும் தாவரங்களையும் மருந்து செய்வதற்காக பறிக்கும் போது. மூலிகைக் குரிய நேரம், திதி, காலம், போன்றவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மருந்தை தயாரிக்க பயன்படுத்தும் தண்ணீரும், பருவ மாற்றங்களும், தயாரிக்கும் இடமும், மருந்தின் தரத்தில் முக்கிய மாற்றங்களை உண்டாக்கும். அன்றைய கால கட்டத்தில் அதாவது, மழை காலம், வெயில் காலம், போன்றவற்றை ஆராய்ந்து. அந்த காலத்தில் மருந்துகளில் என்ன மாறுதல்கள் நடக்கும் என்பதையும் ஆராய வேண்டும்.

சித்தர் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் மூலிகைகளில் எந்த பகுதியை பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஒரு மூலிகையின் இலையை பயன்படுத்துவதாக இருந்தால் கொழுந்து இலையா? வளர்ந்த இலையா? காய்ந்த இலையா? என்பனவற்றை தெளிவாக ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.

வேர்களை பயன்படுத்துவதாக இருந்தால் எந்த நீரோட்டத்தில்? எந்த சீதோசணத்தில்? எந்த நிலத்தில்? கிடைக்கும் மூலிகை மிகவும் உகந்ததாக இருக்கும் என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒரே மூலிகை வெவ்வேறு சீதோஷ்ண நிலைகளிலும், வெவ்வேறு நிலங்களிலும், வெவ்வேறு காலகட்டத்திலும், வெவ்வேறு பருவநிலையிலும், வெவ்வேறான பலன்களைத் தரக்கூடும். இதையும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

“மந்திரம் கால் மதி முக்கால்” என்ற பழமொழிக்கொப்ப மருந்தை விட நோயாளிகளின் மன தைரியமே நோய்கள் குணமாக உறுதுணையாக இருக்கும். மருத்துவர்கள் நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசி அவர்களுக்கு மன தைரியத்தை உருவாக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் நோயாளிகள் அச்சப்படும் அளவுக்கு எதையுமே கூறிவிடக் கூடாது.

« PREV
NEXT »

No comments