நான் பார்த்த வரையில் சாலையோரங்களில் நடந்துச் செல்லும் பெரும்பாலானோர் ஏன் அனைவரும் என்று சொல்லும் அளவுக்கு வாகனங்கள் செல்லும் தடங்களிலேயே நடந்து செல்கிறார்கள். வாகனம் இடது பக்கமாக சென்றால் இவர்களும் இடது பக்கமாக நடக்கிறார்கள். வாகனங்கள் வலது பக்கமாக சென்றால் இவர்களும் வலது பக்கமாக நடக்கிறார்கள்.

சாலையோரங்களில் நடக்கும்போது வாகனங்கள் உங்களின் எதிர்புறமாக வருமாறு நடக்க வேண்டும். அதாவது உங்கள் எதிரே வரும் வாகனங்களையும், உங்களைக் கடந்து செல்லும் வாகனங்களையும் உங்களால் எளிதில் பார்க்க இயல வேண்டும். அதுதான் உங்களுக்கு பாதுகாப்பு.

வாகனங்கள் செல்லும் திசைக்கு எதிர்த்திசையில் நீங்கள் நடந்தால் மட்டுமே எதிரே வரும் வாகனத்தை உங்களால் தெளிவாக பார்க்க முடியும். வாகன ஓட்டி தவறாக வந்தாலும், வேகமாக வந்தாலும், போதையில் தள்ளாடினாளும், விபத்து நடக்க வாய்ப்புகள் இருந்தாலும், உங்களால் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

பெரும்பாலும் சாலைகளில் நடப்பவர்கள் வாகனங்கள் தங்களுக்கு பின்னால் வருவது போன்று நடப்பதினால். தவறாக வரும் வாகனங்களை காணமுடியாமல் விபத்துக்கள் நடக்கின்றன. குறிப்பாக இரவு வேளைகளில் சாலை ஓரங்களில் நடந்து செல்பவர்களை வாகன ஓட்டிகளால் எளிதாக பார்க்க முடியாது. ஆனால் சாலையோரங்களில் நடப்பவர்கள் வாகனங்களை எளிதாக பார்க்க முடியும்.

இனிமேல் சாலையில் நடக்கும்போது வாகனங்கள் இடது புறமாக சென்றால் நீங்கள் வலது புறமாக நடந்து செல்லுங்கள். சாலையில் செல்லும் வாகனத்தை நீங்கள் எதிரே பார்க்கக் கூடிய அளவில் உங்கள் பயணம் இருக்கட்டும்.

சாலைகளை கடக்கும் போதும் இடது புறமாகவும் , வலது புறமாகவும் வாகனங்கள் வருகின்றன என்று பார்த்துவிட்டு. மீண்டும் இடது புறமாக வாகனங்கள் வருகின்றன என்று பார்த்துவிட்டு வாகனங்கள் வராத நிலையில் சாலைகளை கடக்கவும்.

கோயில்களுக்கும் மாதா கோயில்களுக்கும் நடைப் பயணமாக செல்லும் பக்தர்களும் இதை பின்பற்றுங்கள். இதை பின்பற்றினால் பல உயிர் இழப்புகளையும் விபத்துகளையும் தவிர்க்கலாம். இதை உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்.