ஏறத்தாழ ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, நான் பினாங்கு மாநிலத்தில் என் உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். நான் அங்கு இருக்கும் போது, என் உறவினரின் வீட்டுக்கு பொருட்களை கொடுக்க ஒருவர் வந்திருந்தார். வந்தவர் பொருட்களை கொடுத்து விட்டு திரும்பிச் சென்றவுடன் என் உறவினர் கூறினார், வந்தவர் பகலில்தான் இவ்வாறு இருப்பார்; இரவில் வேறு  நபராக  மாறிவிடுவார் என்றார்.

நானும் எதார்த்தமாக என்னை அறியாமலேயே ஆம் இவருக்குள்  ஒரு மோகினி பிசாசு இருக்கிறது என்று கூறிவிட்டேன். என் உறவினர் அதிர்ந்துபோனார். உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டார். எனக்கு தெரியவில்லை ஆனாலும் என்னால் உணர முடிகிறது என்று கூறினேன். பிறகு அந்த நபரின் சில தொந்தரவுகளைப் பற்றி விளக்கினார்.

அன்று இரவு வேலைகளை முடித்து என் உறவினர் திரும்பியவுடன் நானும் அவரும் பினாங்கில் உள்ள ஒரு கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அந்த பாதிக்கப்பட்ட நபரின் பேச்சு தொடங்கியது. அந்த நபரை பற்றி பேசத் தொடங்கியதும் அந்த நபரின் உடலில் இருக்கும் மோகினி பிசாசு அந்த இடத்தில் தோன்றியது.

என் உறவினரின் முகத்தை பார்த்தவாறு நான் அவரின் முன்பாக அமர்ந்திருந்தேன். அந்த மோகினி நான் பார்க்கின்றவாறு, என் உறவினரின் முதுகின் பின்பாக நின்றது. புகையும் வெளிச்சமும் கலந்ததைப் போன்ற ஒரு உருவம். வெள்ளை ஆடையில் இருக்கும் இளம் பெண்ணைப் போன்ற ஒரு உருவம். அது என் கண்களுக்கு தெளிவாக தெரிந்தது.

நான் அவரிடம் அந்த மோகினி இங்கே வந்து விட்டது என்று கூறினேன். அவரும் பதட்டத்துடன் வாருங்கள் இங்கிருந்து சென்று விடுவோம் என்றார். நான் கூறினேன் அந்த மோகினி நம்மை தொந்தரவு செய்ய வரவில்லை. நாம் என்ன பேசுகிறோம் என்று அறிந்து கொள்வதற்காக வந்திருக்கிறது என்று. பிறகு சிறிது நேரம் பேசி விட்டு அங்கிருந்து சென்று விட்டோம்.

பல வருடங்களுக்குப் பிறகு மோகினியால் பாதிக்கப்பட்ட அந்த நபரை சென்ற மாதம் சந்தித்தேன். மோகினியின்  தொந்தரவு இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்டபோது, இப்போது எந்த தொந்தரவும் இல்லை முழுதாக குணமாகிவிட்டது என்று கூறினார்.