கேள்வி பதில்
கேள்வி பதில்

குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குவது எப்படி?

வாசிக்கும் பழக்கமானது அனைவருக்கும் இன்றியமையாத ஒரு முக்கியமான நல்ல பழக்கமாகும். நம் பிள்ளைகளுக்கு அவர்கள் சிறுவர்களாக இருக்கும் காலம் முதலாக வாசிக்கும் பழக்கத்தை உருவாக்காவிட்டால்; அவர்கள் பெரியவர்களானதும் வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்குவது மிகவும் கடினமான காரியமாக இருக்கும்.

சிறுவயதில் பிள்ளைகளுக்கு வாசிப்பின் முக்கியத்துவத்தையும் வாசிப்பில் கிடைக்கும் இனிமையையும் பழக்கி விட்டால்; நீங்கள் வேண்டாம் என்று தடுத்தால் கூட அவர்கள் வாசிப்பை நிறுத்தமாட்டார்கள். ஒரு மனிதன் பிறந்தது முதல் மரணம் வரையில் தன்னை மேம்படுத்திக் கொள்ள வாசிக்கும் பழக்கம் மிகவும் முக்கியமானது. இன்றைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் ஆடியோ, வீடியோ, என பல வளர்ச்சிகளை அடைந்தாலும் வாசிப்பில் கிடைக்கும் அறிவும் தெளிவும் மற்றவைகளில் கிடைப்பதில்லை.

ஒரு மனிதர் பேசுவதை செவிமடுக்கும் போது 50 விழுக்காடுகளும், ஆடியோவாக கேட்கும்போது 35 விழுக்காடுகளும், வீடியோவாக பார்க்கும் போது 50 விழுக்காடுகளும் கற்றுக்கொள்கிறார்கள். சுயமாக வாசிக்கும் பொழுது மட்டுமே 70 விழுக்காடுகள் வரையில் கற்றுக்கொள்கிறார்கள்.

ஒரு விசயத்தை புத்தகமாக அல்லது எழுத்துகளிலிருந்து வாசிக்கும் போது 70 விழுக்காடுகள் வரையில் மனதில் பதிந்துவிடுகிறது. வாசிக்கும் போது அவர்களின் மனமானது வாசிக்கும் புத்தகத்தில் உள்ளவற்றை கற்பனையில் உருவாக்க தொடங்கிவிடும். ஏற்கனவே மனதில் இருக்கும் பதிவுகளையும் அதன் பிறகு வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளையும் புரிந்துக்கொள்ள அந்த புத்தகத்திலிருந்து உருவான பதிவுகள் உதவியாக இருக்கும்.

பிள்ளைகளுக்கு வாசிக்கும் பழக்கம் உருவாக வேண்டுமென்றால் முதலில் பெற்றோர்கள் வாசிக்க தொடங்க வேண்டும். குறைந்த அளவு நாளிதழ்களையாவது பெற்றோர்கள் வாசிக்க வேண்டும். பெற்றோர்களை பார்த்துதான் பிள்ளைகள் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் கூட பிள்ளைகளை வற்புறுத்தி வாசிக்க சொல்லாதீர்கள். எப்பொழுதுமே பிள்ளைகளை பள்ளிப் பாடங்களை மட்டும் வாசிக்கச் சொல்லி வற்புறுத்தாதீர்கள். வாசிப்பு என்பது ஒரு விருப்பமான பொழுதுபோக்காக மாறிவிட்டால் நீங்கள் இல்லாத பொழுதும் அவர்கள் சுயமாகவே வாசித்துக் கொண்டிருப்பார்கள்.

பிள்ளைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க முதலில் பிள்ளைகளுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். பள்ளிப்பாடங்கள், வரலாறு, அறிவியல், என்று பிள்ளைகளுக்கு விருப்பம் இல்லாத புத்தகங்களை வாங்கி கொடுத்து படிக்கச் சொல்லி வற்புறுத்தாதீர்கள். பிள்ளைகளுக்குப் பிடித்த கேளிக்கை, கார்ட்டூன், கதைகள், போன்ற புத்தகங்களை வாங்கி கொடுத்து அவற்றை வாசிக்க சொல்லுங்கள்.

தொடக்கத்தில் பெரிய புத்தகமாக இல்லாமல் 50 பக்கங்களுக்கும் குறைவாக உள்ள சிறிய புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் சொல்லுங்கள். ஒரே நேரத்தில் பல புத்தகங்களை வாங்கி கொடுக்காதீர்கள். ஒரு புத்தகத்தை வாசித்து முடித்த பின்பு அடுத்த புத்தகத்தை வாங்கி கொடுங்கள்.

பிள்ளைகள் வாசித்து முடித்த புத்தகங்களில் கதைகளில் உள்ளவற்றை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பிள்ளைகள் படித்த கதைகளில் உள்ள கதாபாத்திரங்களை பற்றி நீங்களும் அவர்களுடன் விவாதம் செய்யுங்கள் அல்லது கலந்து ஆலோசனை செய்யுங்கள்.

பிள்ளைகள் ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் அதன் தொடர்புடைய அடுத்த புத்தகத்தை வாங்கி கொடுங்கள். தொடர்பில்லாத பல புத்தகங்களை வாசிக்கும் பொழுது அவர்களுக்கு வாசிப்பதில் விரக்தி ஏற்படும், ஆர்வம் குறைந்துவிடும்.

மாதம் ஒருமுறையாவது நாளிதழ்களையும், வார இதழ்களையும் வாங்கிக் கொடுத்து வாசிக்கச் சொல்லுங்கள். இடையிடையே உலக நடப்பு, சினிமா, கேளிக்கை, போன்ற விசயங்களையும் வாசிக்க அனுமதியுங்கள். இவற்றை பிள்ளைகளிடமிருந்து தவிர்க்க முயன்றால் பிள்ளைகளின் மனம் அவற்றின் மீதே நாட்டம் கொள்ளும்.

நீங்கள் வாசித்த நல்ல புத்தகங்களில் உள்ள முக்கியமான கருத்துகளை அவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். சில காலங்களுக்கு பிறகு அவர்கள் சுயமாக வாசிக்க தொடங்கிய பிறகு அவர்களுக்கு நல்ல கருத்துடைய புத்தகங்களை அறிமுகப் படுத்துங்கள்.

கதை புத்தகங்களை அதிகமாக வாசித்தால் பள்ளிப் பாடங்களில் கோட்டை விட்டுவிடுவார்கள் என்று எண்ணாதீர்கள். குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கம் உருவாகிவிட்டால். பல வகையான புத்தகங்களை அவர்கள் வாசித்து பழகிவிட்டால். பள்ளிப் பாடங்களையும் எளிதாக வாசிப்பார்கள், எளிதாக புரிந்துக் கொள்வார்கள்.

வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க உங்களிடம் ஏதாவது ஆலோசனைகள் இருந்தால் கீழே பதிவு செய்யுங்கள்.

« PREV
NEXT »

No comments