கேள்வி பதில்
கேள்வி பதில்

வயதும் மரணமும்

10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 என்று வயதை எண்ணுவது, மனிதன் எத்தனை வருடங்களாக இந்த உலகில் வாழ்கிறான், அவனுக்கு எவ்வளவு அனுபவம் இருக்கும் என்று கணக்கிடுவதற்காக தானே ஒழிய. அவனது மரண தேதியை கணக்கிடுவதற்காக அல்ல.

வயதுக்கும் நோய்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது அதைப்போலவே வயதுக்கும் மரணத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மரணம் எப்பொழுதும், எப்படியும், யாருக்கும் வரலாம். மரணம் மனிதனை நெருங்குவதற்கு எந்த நேரமும் தகுதியும் தேவையில்லை, யாருக்கும் எப்பொழுதும் வரலாம்.

ஒரு சிலர், யாராவது மரணித்து விட்டால் அவர் ஏன் மரணித்தார் என்று காரணம் கேட்பார்கள். ஒரு சிலர் ஒருவரை குறிப்பிட்டு அவருக்கு எந்த நோயுமில்லை, எந்த கெட்ட பழக்கங்களும் இல்லை ஆனால் திடீரென்று மரணமடைந்து விட்டார், ஏன் என்று கேட்பார்கள். ஒரு சிலர் அவன் சிறுகுழந்தை நான்கு ஐந்து வயதுதான் இருக்கும் ஆனால் திடீரென்று மரணமடைந்து விட்டான், ஏன் என்று கேட்பார்கள்.

இவர்கள் அனைவருக்கும் ஒரே பதில் தான், மரணம் நடக்க எந்தக் காரணமும் தேவையில்லை, மரணத்துக்கு வயது வரம்பு கிடையாது. மரணம் யாருக்கும் எப்பொழுதும் வரலாம். இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குறிப்பிட்ட வாழ்நாள் அளவு கொடுக்கப்படுகிறது. அந்த அளவு ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும், எல்லோருக்கும் ஒரே அளவான வாழ்நாள் இருக்காது. ஒரு மனிதன் இந்த உலகத்தில் பிறக்க ஒரு காரணமும் நோக்கமும் இருக்கும், அந்த நோக்கம் நிறைவேற எவ்வளவு காலம் தேவையோ, அவ்வளவு வாழ்நாள் மட்டுமே கொடுக்கப்படும். வந்த நோக்கம் நிறைவேறியதும், மரணம் சம்பவிக்கும்.

பிறந்த நோக்கம் நிறைவேற சிலருக்கு 90 ஆண்டுகள் ஆகலாம், சிலருக்கு 60 ஆண்டுகள் ஆகலாம், சிலருக்கு 40, சிலருக்கு 20, சிலருக்கு 10, அவ்வளவு ஏன் ஒரு சிலருக்கு 3 வயதுக்குள்ளாகவே பிறந்த நோக்கம் நிறைவேறி விடலாம். ஒரு உண்மையைச் சொல்கிறேன் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், மனிதன் இந்த மண்ணில் பிறந்த அன்றே மரணிக்கத் தொடங்கிவிடுகிறான். ஒவ்வொரு நாளும் அவன் உறங்குவது ஒரு சிறு மரணம்தான். மரணம் எப்படி இருக்கும் என்பதற்கான ஒத்திகைதான் தூக்கம்.

குறள் 339:
"உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி, விழிப்பது போலும் பிறப்பு"

என்றார் திருவள்ளுவர். ஒரு மனிதன் உறங்கும் நிலைதான் மரணம், உடலில் வாழ்ந்த ஆன்மா ஒரு நெடுந்தூக்கம் போடுவது தான் மரணமே ஒழிய, மரணம் ஒரு முடிவு கிடையாது. உறங்குபவன் எப்படி மறுபடியும் விழிப்பானோ அதைப்போல் மரணிப்பவனும் மறுபடியும் அடுத்த வாழ்க்கைக்குச் செல்வான். அந்த வாழ்க்கை எங்கே எப்படி இருக்கும் என்று நான் சொல்ல விரும்பவில்லை. அது அவர் அவர் ஞானத்தையும் நம்பிக்கையையும் பொறுத்தது. ஆனால் மறுபடியும் சொல்கிறேன் மரணம் ஒரு முடிவில்லை. வாழ்க்கை முடியாது தொடரும்…!

வயதானால் நோய்கள் நிச்சயமாக உண்டாகுமா?
சத்தியமாக கிடையாது! வயதானால் நிச்சயமாக நோய்கள் உண்டாகும் என்பது வெறும் கற்பனையும் கட்டுக்கதையும் மட்டுமே. வயது என்பது வெறும் அனுபவத்தின் எண்ணிக்கை அளவு மட்டுமே, தேய்மானத்தின் அளவு அல்ல. ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். மனிதனைப் படைத்த இறைவன் தவறுகள் செய்ய வழியே கிடையாது. இறைவன் தவறு செய்யும் பட்சத்தில் அதைச் சரிசெய்ய கூடியவரும் கிடையாது.

மனிதனின் நோய்களுக்கு காரணம்
இன்றைய மனிதன் அனுபவிக்கும் அனைத்து நோய்களுக்கும் அவன் மட்டுமே காரணம். இறைவன் சோதிக்கிறார், இறைவன் பயிற்சி கொடுக்கிறார் என்பதெல்லாம் மனிதனாக செய்துகொள்ளும் கற்பனைகள் மட்டுமே. உண்மையில் இறைவன் மனிதர்களுக்கு எந்த துன்பத்தையும், நோய்களையும் கொடுப்பதில்லை. மனிதன் அனுபவிக்கும் அனைத்து துன்பங்களுக்கும் அவன் மட்டுமே காரணமாகிறான்.

மனிதர்களின் தவறான உணவு முறைகளும், தவறான வாழ்க்கை முறைகளும் தான் அனைத்து நோய்களுக்கும் காரணமாக இருக்கின்றன. உணவு முறைகளையும் வாழ்க்கை முறைகளையும் மாற்றி அமைத்தால் நோய்கள் நிச்சயமாக அண்டாது. தற்போது நோய்கள் இருந்தாலும் நிச்சயமாக அவை குணமாகும்.

நமது புராணங்கள் மற்றும் இதிகாசங்களைப் பாருங்கள். நம் முன்னோர்கள் 100 வயதில் 120 வயதில் போர்களில் போரிட்டு இருக்கிறார்கள். 100 வயதுக்கு மேல் திருமணம் செய்தார்கள், 100-200 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று அவை கூறும். இதிகாசங்கள் புராணங்கள் எல்லாம் வெறும் கற்பனையே என்று சொல்பவர்களுக்கு சொல்கிறேன், இல்லாத ஒன்றை யாராலும் கற்பனை செய்ய முடியாது. உதாரணத்துக்கு சொல்கிறேன், புலிக்கு 5 கால், 3 தலை, என்று கொஞ்சம் கூடுதலாக சொல்லலாமே ஒழிய இல்லாத ஒரு விலங்கை கற்பனை செய்து இருப்பதை போல் காட்டமாட்டார்கள்.

மனிதன் 100 வயதிலும் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் வாழ முடியும் என்பதற்கு பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை, உங்கள் முன்னோர்களைப் பாருங்கள். உங்கள் குடும்பத்திலேயே 2-3 தலைமுறைகளுக்கு முன்பாக 100 வயதுக்கு மேல் வாழ்ந்தவர்கள் இருப்பார்கள். என் வார்த்தையைக் கவனியுங்கள், நான் வாழ்ந்தார்கள் என்று சொன்னேனே ஒழிய இருந்தார்கள் என்று சொல்லவில்லை. படுத்த படுக்கையாக இருப்பவர்களைக் கூட நாம் இருக்கிறார்கள் என்று சொல்லலாம் ஆனால் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் இருந்தவர்களைத்தான் வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியும்.

மனித வாழ்க்கை
மனிதனின் உடல் அனுதினமும் புதுப்பிக்கப்படுகிறது. மனித உடலில் புதிய செல்கள் உற்பத்தி ஆவதும் இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதும் ஒரு அன்றாட வேலையாக நடைபெறுகிறது. உடலின் ஒவ்வொரு பகுதியின் செல்களும் மறு சீரமைக்கப்படும், அதிகபட்சம் 6 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு முழு மனிதன் தோன்றுகிறான். அதாவது நீங்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் உடலின் பெரும்பாலான பகுதிகளை புதுப்பித்து கொள்கிறீர்கள். இந்த படைப்பின் அடிப்படையில் பார்த்தால், மனிதனுக்கு எவ்வளவு கொடுமையான, எவ்வளவு ஆபத்தான நோய் இருந்தாலும் அவை 6 மாதங்களில் குணமாக வேண்டும். ஆறு மாதங்களுக்கு மேல் நோய் குணமாகவில்லை என்றால், நோய்களை குணமாகவிடாமல் அந்த நோயாளி ஏதோ தவறு செய்கிறார் என்று அர்த்தம்.

அவரின் நோய் குணமாகாமல் இருப்பதற்கு அவர் சாப்பிடும் மருந்து மாத்திரைகளே கூட காரணமாக இருக்கலாம். இல்லாத நோய்களுக்கு வைத்தியம் பார்க்கும் போதும், தவறான மருந்து மாத்திரைகள் சாப்பிடும் போதும், இரசாயனங்களை பயன்படுத்தும் போதும் நோய்கள் குறையாமல் பெருகக் கூடும். மரணம் கூட சம்பவிக்கலாம்.

மனித உடலை 120 வருடங்களுக்கு மேல் பயன்படுத்த முடியும் ஆனால் 100 வருடங்கள் 120 வருடங்கள் வாழ வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. ஆனால் 30 வருடங்கள் வாழ்ந்தாலும் ஆரோக்கியமாக, திடகாத்திரமாக, மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழ்ந்து, நிம்மதியாக மன நிறைவாக மரணிக்க வேண்டும். நிறைவேறாத ஆசைகளுடனும், ஏக்கங்களுடனும், பயத்துடனும் உயிர் பிரியக்கூடாது. மரணம் என்பது பயப்பட வேண்டிய ஒன்று அல்ல.

மரணம் என்பது ஒரு அழகான மகிழ்ச்சியான விசயம். “பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து”, என்று மாணிக்கவாசகர் பாடும் அந்த எல்லாம் வள்ள இறைவனை நாம் சந்திக்க கூடிய ஒரு வாய்ப்பு. இந்த உடல் அனுபவிக்கும் எல்லா தொந்தரவுகள், உபாதைகள், நோய்களிலிருந்தும் விடுதலை அடைய கூடிய ஒரு வாய்ப்பு. உலகியல் வேதனைகள், துன்பங்களிலிருந்தும் விடுபட ஒரு வாய்ப்பு. அந்த மரணத்தை பார்த்து ஏன் பயப்பட வேண்டும்?.

இப்போது இருக்கும் வீட்டை விட்டு, இதைவிட ஒரு நல்ல விசாலமான அனைத்து வசதிகளும் நிறைந்த ஒரு வீட்டைக் கொடுத்தால் வேண்டாமென சொல்வீர்களா?. மரணம் என்பதும் அப்படிதான், ஊனமுற்ற நோய்வாய்பட்ட, முதுமை அடைந்த உடலை விட்டு வேறு ஒரு புதிய ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ ஒரு வாய்ப்பு. இது சந்தோஷப்பட வேண்டிய விசயம் தானே?.

எல்லாம் வல்ல இறைவனை, நம்மை படைத்த பரம்பொருளை அடைவது தான் மனித பிறப்பின் நோக்கமென்று அனைத்து சமயங்களும் சொல்கிறது. மரணம் அடையாமல் எப்படி அந்த பரம்பொருளை அடைவீர்கள்?.

மனிதன் மரணத்தை நினைத்து பயப்படுவதற்கு காரணம் அவனது மனம். அந்த மனதில் அவன் சேர்த்து வைத்திருக்கும் ஆசைகளும் இச்சைகளும். அந்த இச்சைகளை அடைய முடியாமல் அல்லது அடையாமல் இறந்து விடுவோமோ என்ற பயத்தில் தான் மனிதர்கள் மரணத்தைக் கண்டு பயப்படுகிறார்கள்.

நோய்களால் உண்டாகும் மரணங்கள்
சிலர், நோய்வாய் கண்டு மரணிக்கிறார்கள். நோய்களுக்கும் மரணத்துக்கும் என்ன தொடர்பு?. நோய்கண்டவர்கள் மரணிப்பார்களா?.

மனித உடலின் குறைபாடுகளால் உண்டாகும் நோய்களை குணப்படுத்த முயற்சி செய்யலாம், அவற்றை குணப்படுத்த வாய்ப்புகள் உண்டு ஆனால் மரணம் நடக்க உண்டாகும் நோய்களை குணப்படுத்த முடியாது. மனித உடலில் நோய்கள் உண்டாக காரணம் என்ன வென்று ஏற்கனவே பல கட்டுரைகள் எழுதியுள்ளேன் அதை படித்து புரிந்துகொள்ளுங்கள்.

நோய்வாய் கண்டவர்கள் சிலர் மரணித்து விடுகிறார்கள். உண்மையைச் சொல்வதானால் அவர்களின் மரணத்துக்கும் அவர்களின் நோய்க்கும் எந்த தொடர்பும் கிடையாது. நோய்வாய்ப்பட்டவர்கள் மரணிக்கவில்லை, மாறாக மரணத்தின் தறுவாயில் அவர்களுக்கு நோய் கண்டது. புரிகிறதா?. நோய்கள் உண்டானால் மரணம் நிகழும் என்பது சுத்த பொய். ஆனால் மரணம் நிகழ வேண்டிய நேரம் வந்துவிட்டால், அந்த மரணத்தை நிகழ்த்த சிலருக்கு நோய் உண்டாகலாம்.

அதனால் நோய்களை கண்டோ, மரணத்தைக் கண்டோ பயம் கொள்ளாதீர்கள். தைரியமாக இருங்கள் அனைத்து உடல் உபாதைகளும் தானாக குணமாகும்.


« PREV
NEXT »

No comments