பச்சைக் கம்பளமாய் - உதறி
விரிக்கப்பட்ட புல்வெளியில்
பனி படர்ந்த காலை வேளையில்
பாதணியற்ற கால்களுடன்

பாதம் குளிர நடந்து மகிழ்ந்தீர்கள்
குளிர்ந்தது மனதும்தான்
படுத்துப் புரண்டீர்கள்
நனைந்தது நீங்கள்தான்

பச்சை புற்களின் அழகை
பசுமையை, அதன் வனப்பை
கண்டு ரசித்தீர்கள்
மகிழ்ந்தது நீங்கள்தான்

உங்கள் நினைவில்
நிழலாடும் அதன் நிகழ்வுகள்
ஆனந்தம் உங்களுக்குத்தான்
மன அமைதியும் உங்களுக்குத்தான்

இதில் எதையாவது
புல் அறியுமா?
புல்லுக்குப் புரியுமா?
இதுதான் காதல்

உங்கள் உள்ளம் கவர்ந்தவளை
பாருங்கள், ரசியுங்கள், சிரியுங்கள்
மனதார நேசியுங்கள்
அவளுடனே வாழுங்கள்

அவளுக்கு - தகவல்
சொல்ல வேண்டிய அவசியமில்லை
அவளுக்கு புரியவேண்டிய
அவசியமும் இல்லை
அவள் அனுமதியும் தேவையில்லை

அவள் வாழும் மனதும்
அவளின் நினைவுகளும் - முழுமையாக
உங்களுக்கே சொந்தம்
காதல் செய்யுங்கள் முழுமையாக
அவளை

அந்த காதல்
அந்த உணர்வு
அந்த ஆனந்தம்
அந்த நினைவுகள்
உங்களுக்கே சொந்தம்

ஆனால் அவள்..?