கேள்வி பதில்
கேள்வி பதில்

திருமணம் மற்றும் முதலிரவு


ஒரு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வைக்கும் நிகழ்வுக்கு திருமணம் என்று பெயரிட்டார்கள் நம் முன்னோர்கள். அது என்ன திருமணம்?. திருமணம் என்பது ஒரு ஆண்மகனின் மனதையும் பெண் மகளின் மனதையும் இணைக்கும் ஒரு அற்புத நிகழ்வு. இந்த அற்புதமான நிகழ்வில் இரு மனங்கள் இணைகிறதே ஒழிய இரு உடல்கள் மட்டுமல்ல. திருமணத்தின் பிரதான நோக்கம் என்பது உடல் உறவு கொள்வது அல்ல, இரு மனம் இணைந்து, புரிந்து, அன்பு செலுத்தி, சேர்ந்து வாழ்வதே திருமணம்.

இதைத்தான் திருவள்ளுவர் மிக அழகாக:
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை, பண்பும் பயனும் அது". என்று கூறுகிறார்.

இரு மனங்கள் இணைந்து ஒருவருக்கொருவர் அன்பாகவும் ஆதரவாகவும் வாழும் பொழுது இயற்கையாகத் தூண்டுதல் உண்டாகி உடல் உறவு நடக்க வேண்டும். இன்று அன்பையும், காதலையும் விட உடலுறவே பிரதானம் என்று ஆனதுதான் பல குடும்ப பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருக்கிறது.

முதல் இரவு
திருமணமான முதல் இரவுக்கு நம் முன்னோர்கள் வைத்த பெயர் சாந்தி முகூர்த்தம். அது என்ன சாந்தி முகூர்த்தம். ஆண் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள ஏங்கும் பெண்ணின் மனதையும், பெண் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள ஏங்கும் ஆணின் மனதையும், இதோ உன் மறுபாதி என்று இருவருக்கும் அறிமுகப்படுத்தி இருவர் மனதையும் அமைதிப்படுத்தும் நிகழ்வுக்குப் பெயர் தான் சாந்தி முகூர்த்தம்.

அந்த சாந்தி முகூர்த்தம் கணவனுக்கும் மனைவிக்கும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைய வேண்டுமே ஒழிய. அந்த முதல் இரவே ஒரு கெட்ட கனவாக மாறிவிடக் கூடாது. கணவன்மார்களே இரு மனம் இணைந்து காதலால் காமம் உருவாகி உடல் உறவு நடக்க வேண்டுமே தவிர உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள உங்கள் மனைவியை வற்புறுத்தாதீர்கள். அது அவளுக்கு ஒரு கெட்ட அனுபவமாக அமையும், உங்களுக்கும் கேடுதான்.

முதல் இரவில் உடல் உறவு கொள்ள அவசியமில்லை
நேற்று வரை யார் என்றே தெரியாத ஒரு ஆணும் பெண்ணும் ஒரு சடங்கின் பெயராலும், ஆசையின் பெயராலும், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்தும், முதல் இரவு அன்றே உடல் உறவில் ஈடுபடுவது அவ்வளவு நல்லதல்ல.

வெறும் காமத்தினாலும் ஆசையினாலும் உடலுறவு கொண்டால், அது வெறும் நிகழ்வாக இருக்குமே ஒழிய, அது ஒரு ஆனந்த நிகழ்வாக உணர மாட்டீர்கள். முழுதான மன திருப்தியும் அடைவது கடினம்.

திருமணமான ஆணும் பெண்ணும் முதலில், ஒருவரை ஒருவர் பார்த்து, பழகி, அன்புக் கொண்டு, காதலாகி, ஆசையாகி பின்பு உடல் உறவு கொண்டால், அந்த உறவு மிகவும் இனிமையாகவும் என்றென்றும் நிலைத்து நிற்கும் காதலாகவும் இருக்கும். இது உங்களுக்குச் சிறந்தது.


« PREV
NEXT »

No comments