காற்று வரட்டுமென
பேருந்தின் ஜன்னலை
திறந்து வைத்து
புறப்படக் காத்திருந்தான்

டேய்... பார்த்துப்போடா என
தன் பெயரில் அலட்டல் கேட்டு
திடுக்கிட்டு
ஒலி வந்த வழி நோக்கினான்

இளம் பெண்ணொருத்தி
சிறுவனின் - கைபிடித்து
கூட்டத்தில் அழைத்துச் சென்றால்

அவன் கண்கள்
அவள் முன்னோக்கிச் சென்றன
அவன் மனமோ
பத்து பதினோரு வருடங்கள்
பின்னோக்கிச் சென்றது

அதே அலட்டல்
அதே பெண் - அன்று
இவன் காதலியாக

சந்தர்ப்பத்தில் பிரிந்தவர்கள்
மீண்டும் காண மாட்டோமா - என
பல வருடங்கள் காத்திருந்து - அவள்
முகம் கூட மறந்துபோனான்

எதிர்பாரா விதமாக
மீண்டும் அவள்
பேருந்து நிலையத்தில்
சகப் பயணியாக

கல்லூரியில் பிரிந்தவர்கள்
பேருந்தில் சேர்ந்தார்கள்

நலமா - என
ஒற்றைச் சொல் கேட்க
அவள் முகம் பார்த்து
புன்னகைக்க - அல்லது
அவள் முகத்தையாவது
முழுமையாக பார்க்க
மனம் தவித்தது

சற்று நிதானித்து
நிலமையை உணர்ந்தான்
அவள் காணாத வகையில்
சூதானமாக

அவன் முகத்தை
ஜன்னலின் பின்னும்
அவள் முகத்தை
மனதின் பின்னும்
மறைத்துக் கொண்டு

பயணத்தைத் தொடர்ந்தான்
அவளை துணைக்கு
அழைத்துக்கொண்டு