கேள்வி பதில்
கேள்வி பதில்

மனிதர்களின் தனித்தன்மையான குணங்கள்

இந்த உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும், ஒரு தனிப்பட்ட சிந்திக்கும் முறை இருக்கும். இந்த வாழ்க்கையைப் பற்றிய சுய பார்வை இருக்கும் ஒரு தனிப்பட்ட இயல்பு இருக்கும். ஒரு தனிப்பட்ட குணாதிசயம் இருக்கும். ஒவ்வொரு மனிதர்களும் தனித்தன்மை வாய்த்தவர்கள்.

ஒரு குடும்பத்தில் பத்து நபர்கள் இருந்தாலும் அவர்கள் பத்து தன்மைகளுடன் பிறந்திருப்பார்கள். ஒரு ஊரில் 1000 நபர்கள் இருந்தால் 1000 வகையான தன்மைகளுடன் இருப்பார்கள். அவ்வளவு ஏன் இந்த உலகில் வாழும் அத்தனை கோடி மனிதர்களும், அத்தனை கோடி  தன்மைகளுடன் படைக்கப்பட்ட மனிதர்களே.

இவர்களில் எந்த இரு மனிதர்களும் ஒரே மாதிரியான இயல்புடன் இருக்கமாட்டார்கள். இருவர் சில விசயங்களில் சற்று ஒத்துப் போகலாம் ஒழிய நூற்றுக்கு நூறு சம தன்மையுடைய இரண்டு மனிதர்கள் இந்த உலகில் எந்த மூலையிலும் இருக்க மாட்டார்கள். இதை புரிந்துக் கொண்டால் மனிதர்களுக்கிடையில் மனஸ்தாபங்கள் உருவாக வாய்ப்பே கிடையாது.

மனிதர்கள் பெரும்பாலும் தன்னைப் போலவே மற்றவர்களையும் எண்ணுகிறார்கள். நல்லவர்கள் அனைவரையும் நல்லவர்கள் என்று நம்பி ஏமாறுகிறார்கள். அப்பாவிகள் அனைவரையும் அப்பாவிகள் என்று நம்பி ஏமாறுகிறார்கள். கெட்டவர்கள் அனைவரையும் கெட்டவர்கள் என்று நினைத்து சந்தேகம் கொள்கிறார்கள். பொறாமை குணம் உள்ளவர்கள் அனைவரும் நம்மைப் பார்த்து பொறாமைப்படுவார்கள் என்று நம்புவார்கள்.

இவ்வாறு ஒரு மனிதனுக்கு எந்த இயல்பு இருக்கிறதோ, அதை வைத்து பிற மனிதர்களையும் எடைபோடுவார்கள். ஒருவருக்கு இருக்கும் குணாதிசயம் அனைவருக்குமே இருக்கும் என்று நம்பி ஏமாறுவதும், ஏமாற்றுவதும், விரக்தி அடைவதும், தொடர்ச்சியாக நடக்கிறது.

மனிதர்கள் தன்னைப் போலவே மற்றவர்களும் இருக்க வேண்டும், அல்லது இருப்பார்கள் என்று நம்பும்போது ஏமாற்றங்களும், மனக்குழப்பங்களும், மன சமமின்மைகளும், மன வேதனைகளும், உருவாகின்றன.


« PREV
NEXT »

No comments