மனிதனும் மனமும்

மனதை வெறும் பதிவு செய்யும் இயந்திரமாக நினைத்து கடந்து செல்ல முடியாது. அதையும் தண்டி, அது பல ஆற்றல்களை கொண்டது. மனம் என்பது இறைவன் நமக்களித்த ஒரு அற்புதமான ஆற்றலாகும். மனமானது எல்லா வல்லமைகளையும் பெற்றது. மனதின் உதவியுடன் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். அமைதியான மனம், நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதுப் போல் அமைதியற்ற மனமானது நிம்மதியை அழித்து மகிழ்ச்சியை சீரழிக்க கூடியது.

மனமானது உடல் ஆரோக்கியம் முதல், உடல் பலம், கல்வி, அறிவு, ஒழுக்கம், செல்வம், நிம்மதி, மகிழ்ச்சி வரையில் அனைத்தையும் நிர்னைக்க கூடியதாக இருக்கிறது. சீர் கெட்ட மனம் ஒரு யானையையும் பூனையாகிவிடும். ஆரோக்கியமான மனம் ஒரு பூனையைக் கூட யானை பலம் கொண்டதாக மாற்றிவிடும். ஒரு மனிதனுக்கு கல்வி, அறிவு, செல்வம், பெயர், புகழ், மக்கள் என அனைத்தும் இருந்தாலும், அவன் மனம் மட்டும் சீர்கெட்டுவிட்டால், அவனை செல்லாக் காசாக்கிவிடும். இவை ஒன்றும் இல்லாதவனாக இருந்தால் கூட மனம் மட்டும் செம்மையானால், இவை அனைத்தையும் தக்க நேரத்தில் அவனுக்கு கிடைக்க செய்யும்.

மனம் மட்டும் முழு இயல்புடனும் ஆற்றலுடனும் செயல் புரிந்தால், மனிதன் அனைத்து ஆற்றல்களையும் இயல்பாகவே பெற்றுவிடுவான். வாழ்வதற்குத் தேவையான அறிவு, ஆற்றல் முதல் அஷ்டமாசித்திகள் வரையில் அனைத்தையும் அடையும் ஆற்றல் மனதிடம் உண்டு. மனதை தீய எண்ணங்களின்றி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை அழகானதாக இருக்கும்.

மனிதன் என்பவன் உடல், உயிர், மனம் மற்றும் சக்தியின் கலவையே. ஆதலால் மனம் வேறு மனிதன் வேறு என்பதும், மனதை அழிக்கிறேன் ஒழிக்கிறேன் என்பதெல்லாம் தவறான புரிதலைக் கொண்டவர்கள் கூறும் செய்திகளாகும். மனதை நாம் செய்ய வேண்டிய ஒரே விசயம், புரிந்து கொள்வது மட்டுமே.

To Top