கேள்வி பதில்
கேள்வி பதில்

கர்ம கணக்கும் பிறப்பும்

இந்தியாவில் தோன்றிய சைவம், வைணவம், பௌத்தம், சமணம், சீக்கியம், மற்றும் ஹிந்து மதங்களுக்கிடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. குறிப்பாக மனிதர்களின் ஆன்மாக்கள் மறுபிறப்பு எடுக்கும் என்பதை இந்தியாவில் தோன்றிய அனைத்து மதங்களும் ஒப்புக்கொள்கின்றன. மனிதர்களின் வாழ்க்கை ஒரு முறைதான் என்பதையும், மரணத்துக்கு பின்பு நேரடியாக சுவர்க்கம் அல்லது நரகம் செல்வார்கள் என்பதையும் இந்த மதங்கள் ஒப்புக்கொள்வதில்லை.

ஆன்மாக்கள் தங்களின் கர்ம கணக்குகள் முடியும் வரையில் மீண்டும் மீண்டும் பிறந்துக்கொண்டே இருக்கும் என்பது மேலே குறிப்பிட்ட மதங்களின் நம்பிக்கையாகும். இந்த மதங்களை பின்பற்றும் பலர் பாவம் செய்தவர்கள் மட்டுமே மீண்டும் பிறப்பெடுப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு தவறான நம்பிக்கையாகும்.

ஆன்மாக்களை மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க தூண்டுவது அவை செய்த கர்மாக்களாகும். கர்மா என்ற சொல்லுக்கு பாவம் என்று பொருளல்ல, மாறாக கர்மா என்றால் செயல்கள் என்றுதான் பொருளாகும். ஒருவர் செய்யும் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டுமே பிறப்பெடுக்க காரணமாக இருக்கலாம். ஒரு ஆன்மாவின் உடல், மனம், புத்தி, குடும்பம், ஆரோக்கியம், செல்வம், உறவுகள், போன்றவை அந்த ஆன்மாவின் முந்தைய பிறப்பின் தொடர்ச்சியாகவும் அதன் பலனாகவும் அமைகின்றன.

இறந்த ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பெடுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒரு காரணம் கர்ம கணக்கை நிவர்த்தி செய்வதற்காக. கர்ம பலனை அனுபவிப்பதற்காக பிறப்பு எடுப்பதால்தான் சிலர் ஏழைகளாகவும், சிலர் வசதி படைத்தவர்களாகவும், சிலர் ஆரோக்கியமாகவும், சிலர் நோயாளிகளாகவும், சிலர் ஊனமாகவும், இன்னும் பல வித்தியாசங்களில் பிறக்கிறார்கள்.

உழைக்காதவர்களும், எந்தத் திறமையும் இல்லாதவர்களும், எந்த முயற்சியும் செய்யாதவர்களும், மடையர்களும் வசதியாக வாழ்வதற்கும். சிலர் என்ன படித்தாலும், என்ன திறமை இருந்தாலும், என்னதான் முயற்சி செய்தாலும் வாழ்கையில் தோல்விகளும் துன்பங்களும் உண்டாவதற்கும். சிலர் பிறக்கும் போதே செல்வ செழிப்போடு பிறப்பதற்கும், சிலர் பிறக்கும் போதே பெற்றோர்களை இழப்பதற்கும், வறுமையில் வாடுவதற்கும் அவர்களின் கர்ம பலன்கள் தான் காரணம். அந்த குறிப்பிட்ட ஆன்மா முந்தைய பிறவிகளில் செய்தவற்றின் பலனாகத்தான் இந்த வாழ்க்கை அமைந்துள்ளது.

அடுத்த பிறவி சிறப்பாக அமைய வேண்டுமென்றாலோ. அல்லது அடுத்த பிறவி இந்த பூமியில் பிறக்க கூடாது என்றாலோ, இந்த வாழ்க்கையை விழிப்போடும், கவனத்துடனும் வாழவேண்டும். பற்றோடும் நான் என்ற அகந்தையோடும் மனிதர்கள் செய்யும் அத்தனை செயல்களும் மறுபிறப்புக்கு வழிவகுக்கும். சில நெல்மணிகளுக்கு ஆசைப்பட்டு கூண்டுக்குள் அடைபட்டு கிடைக்கும் பறவைகளை போல, ஆன்மாக்கள் உலக இச்சைகளுக்கு ஆசைப்பட்டு இந்த பூமியில் அடைபட்டு கிடக்கின்றன.


« PREV
NEXT »

No comments