மனதின் பிராதான வேலை, பதிவு செய்வதும், பதிவு செய்தவற்றை செயல்படுத்துவதும். உணர்ச்சி, சுவைத்தல், நுகர்தல், பார்த்தல், கேட்டல் என மனிதன் உணரும் அனைத்து விஷயங்களையும் பதிவு செய்கிறது. மனிதன் உறக்கத்தில் இருந்தாலும், உணர்ச்சிகளற்று இருந்தாலும், அவ்வளவு ஏன் கோமா நிலையில் இருந்தாலும் கூட மனம் வேலை செய்யும். மனம் பதிவு செய்வது மட்டுமின்றி, அந்த பதிவுகள் தொடர்பான மற்ற விஷயங்களையும் ஆராயும். அதே நேரத்தில் மனதின் பதிவுகள் தொடர்பான மனிதர்களையும், நிகழ்வுகளையும், விஷயங்களையும், தொடர்புப் படுத்தவும் செய்யும்.

இன்றும் நாம் பெரியவர்களான பிறகு கூட, சில விஷயங்களை அல்லது சில பொருட்களை பார்க்கும் போதும். சிறு வயதில் இதற்காக ஆசைப்பட்டேன் கிடைக்கவில்லை என்று கூறுவதுண்டு. சில விஷயங்களை செவிமடுக்கும் போது எங்கேயோ கேட்ட ஞாபகம் என்று கூறுவதுண்டு. சில மனிதர்களை பார்க்கும் போதும், சில இடங்களுக்கு செல்லும் போதும், எப்போதோ சந்தித்த உணர்வுகள் வருவதுண்டு. இவை அனைத்து நம் மனதில் பதிந்த அனுபவங்கள்தான்.

50 ஆண்டுகள் ஆனாலும் மனமானது சிறுவயது அனுபவங்களைக் கூட நினைவில் வைத்திருந்து அதை செயல்படுத்தும் ஆற்றலுடையது.

மனிதனின் நம்பிக்கைகள்
ஒரு மனிதன் எதை நம்புகிறானோ அதுவாகவே மாறுகிறான். மனிதன் எதை நம்புகிறானோ அதுதான் அவனுக்கு நடக்கிறது. நம் வாழ்க்கையைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் நாம் என்றோ நினைத்த, என்றோ தேடிய, என்றோ நம்பிக்கை கொண்ட, என்றோ ஆசைப்பட்ட விடயங்கள் தற்போது நம் வாழ்க்கையில் நடப்பதை உணரலாம்.